அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் கைப்பற்றப்பட்டது என்ன..? – அமலாக்கத்துறை ட்வீட்

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் கைப்பற்றப்பட்டவை குறித்து  அமலாக்கத்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செங்குந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் என்பவரின்…

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் கைப்பற்றப்பட்டவை குறித்து  அமலாக்கத்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செங்குந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள அமைச்சர்
செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் என்பவரின் “இளந்தளிர் பைனான்ஸ்”
அலுவலகம் மற்றும் அம்பாள் நகரில் உள்ள அவரது வீடு ஆகிய இரண்டு இடங்களில்
நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 3) காலை 9 மணி அளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். மாலை 6 மணி வரை தொடர்ந்த இந்த சோதனை 8 மணி நேரத்திற்கு பிறகு சோதனையை முடித்துக் கொண்டு சில ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.

இதேபோல், சின்ன ஆண்டாள்கோவில் பகுதியில் உள்ள குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான “தனலட்சுமி செராமிக்ஸ்” என்ற டைல்ஸ் கடை மற்றும் அவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடு உள்ளிட்ட இரண்டு இடங்களில் வியாழக்கிழமை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில் கரூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் அமைந்துள்ள லக்கி டிரேடர்ஸ் டையிங் நிறுவன அலுவலகத்தில். நேற்று இரண்டு மணிக்கு தொடங்கிய சோதனை இரவிலும்  தொடர்ந்தது. அதிகாலை 2 மணியளவில் நிறைவு பெற்றது. இதேபோல் அமைச்சர் செந்தில்பாலாஜி உதவியாளர் சங்கர் வீடு அலுவலகம் உள்பட ஆறு இடங்களில்  நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றது.

இந்த நிலையில் அமலாக்கத்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் தொடர்புடைய நபர்களின் இடங்களில் நடத்தப்பட்ட சோதனை குறித்து வெளியிட்டுள்ளது. அதில் 9இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சோதனையின்போது ரூ.22 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும்,  ரூ.16 லட்சம் கணக்கில் வராத பொருட்கள்  மற்றும் 60 நில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.