ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது – 3 ஆண்டுகள் சிறைதண்டனை!

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இஸ்லாமாபாத் விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானின் 2018-ஆம் ஆண்டு இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது வெளிநாட்டுப் பயணத்தின் போது பரிசாக…

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இஸ்லாமாபாத் விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானின் 2018-ஆம் ஆண்டு இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது வெளிநாட்டுப் பயணத்தின் போது பரிசாக பெற்ற பொருட்களை, அரசு கருவூலத்தில் சேர்க்காமல், தனது சொந்த கணக்கில் சேர்த்தது, பாகிஸ்தானில் தேர்தல் பிரச்சாரத்தின் போது காவல்துறை, நீதித் துறையைச் சேர்ந்தவர்களுக்கு மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 9 வழக்குகள் இம்ரான் கான் மீது உள்ளது. இந்த வழக்குகள் பாகிஸ்தானின், இஸ்லாமாபாத் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

அவர் பிரதமராக இருந்தபோது பதவியை தவறாகப் பயன்படுத்தி ரூ.14 கோடி ஊழல் செய்ததாக இம்ரான் கான் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் இம்ரான் கானிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இன்று நடைபெற்ற விசாரணையின் முடிவில், குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டதால், இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அபராதத்தொகையை கட்டத்தவறினால், மேலும் 6 மாதங்களுக்கு கூடுதலாக சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அவர் 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது. மேலும், 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், இம்ரான் கானின் எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.