அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மீண்டும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கடந்த மாதம் 14-ம் தேதி அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி வாதிட்டார்.
இதன் பின்னர் நீதிபதி ஜெ. நிஷா பானு “ மேகலாவின் மனு விசாரணக்கு உகந்ததே. அதனால் ஆட்கொணர்வு ஏற்கப்படுகிறது. செந்தில்பாலாஜியை உடனடியாக விடுவிக்கலாம். நீதிமன்ற காவலில் வைத்தது சட்டவிரோதம் என்பதால் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க முடியாது” என தீர்ப்பளித்தார்.
ஆனால், நீதிபதி பரத சக்ரவர்த்தி ”நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டப் பிறகு இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல. செந்தில்பாலாஜியை சிறையில் அடைத்த உத்தரவு சட்டவிரோதம் என கூறமுடியாது. அதனால் மேகலாவின் ஆட்கொணர்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.” என தீர்ப்பளித்தார்.
இரண்டு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் இந்த வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரிப்பார் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயனை நியமித்து தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபுர்வாலா உத்தரவிட்டார்.
செந்தில் பாலாஜி கைது தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை ஜூலை 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெறும் என மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் கடந்த ஏழாம் தேதி உத்தரவு பிறப்பித்து இருந்தார். அதன்படி இன்று வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் அமலாக்கத்துறை கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவின் மூலம் தங்களது கருத்தைக் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







