திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்ப சண்டையை முடித்து விட்டு வருவதற்குள், அடுத்த தேர்தல் வந்து விடும் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார்.
மதுரை மாவட்டம் சோழவந்தானில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின் அவரது குடும்ப சண்டையை முடித்து விட்டு வருவதற்குள் அடுத்த தேர்தல் வந்துவிடும் என்று கூறினார். மேலும், திமுக இரண்டாக உடையும் என்றும் அவர் தெரிவித்தார்.
மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக முடியாது என மு.க. அழகிரி கூறியதை பற்றி குறிப்பிட்ட அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மு.க. அழகிரிக்கு உண்மை தெரியும் என்பதால், அவர் கூறி இருப்பது சரியாகத்தான் இருக்கும் என்றார். அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்றும், பாஜக உள்ளிட்ட மற்ற கூட்டணி கட்சிகளும் இதை ஏற்றுக்கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார். தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிகட்டு நடத்த அனுமதி வழங்கியுள்ள தமிழக அரசு, எப்போதும் பாரம்பரியத்தை காக்கும் என்றும் பெருமிதம் தெரிவித்தார்.







