ஆன்லைன் சூதாட்ட மசோதா தொடர்பாக ஆளுநரை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க தாம் அனுமதி கேட்டு ஒரு வாரம் ஆகியும் அனுமதி கொடுக்கப்படாததன் காரணம் என்ன? என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். சட்டப்பேரவையில் இணையவழி சூதாட்டங்களை தடைசெய்யவும், மற்றவற்றை ஒழுங்குபடுத்தவும் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பட்டது எனவும் அவசர சட்டத்தின் ஷரத்துகளின் அடிப்படையிலேயே சட்ட மசோதாவும் நிறைவேற்றப்பட்டது எனவும் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
ஆளுநர் மாளிகையிலிருந்து நேற்றுக்கடிதம் வந்தது. இன்று காலை 11 மணிக்குள்ளாக பதில் அளித்துள்ளோம் எனக் கூறிய அமைச்சர் ரகுபதி, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் சட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசு மிகுந்த ஆர்வத்துடன் உள்ளதாக தெரிவித்தார்.
சட்டமசோதா அரசியல் அமைப்புச் சட்டத்தின் கூறுகளுக்கு உட்பட்டதாக இருக்கிறதா என்பதற்கு சரியாக பதிலளிக்கப்படவில்லை என ஆளுநர் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டதாகவும் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டுதான் மசோதா இயற்றப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு பதில் அளித்துள்ளதாகவும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.
ஆன்லைன் – ஆஃப்லைன் சூதாட்டங்கள் சட்டமசோதாவில் வேறுபடுத்தப்பட்டுள்ளது,
திறமையின் அடிப்படையிலான விளையாட்டுகள் குறித்த உயர்நீதிமன்ற கருத்து கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட விளக்கங்களையும் ஆளுநரிடம் அரசு அளித்துள்ளதாகவும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். விளக்கங்களை ஏற்று சட்டமசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என தாம் எதிர்பார்ப்பதாகவும் ரகுபதி நம்பிக்கை தெரிவித்தார்.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டபோது, விளக்கம் கேட்காமல் இப்போது விளக்கம் கேட்பது குறித்து ஆளுநரிடம் தான் கேட்கவேண்டும் என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். ஆளுநரை சந்திப்பதற்கு நேரம் கேட்டு ஒருவாரமாகியும் நேரம் தரவில்லை, அதற்கான காரணமும் தெரிவிக்கவில்லை என்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.







