ஈரோட்டில் நடைபெற்ற மருத்துவ முகாமில் கலந்து கொண்ட வீட்டு வசதி துறை மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி மதுகடைகளை அடைக்கவும், நியாய விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தியாளர்கள் சந்திப்பில் பேட்டி அளித்தார்.
ஈரோடு, கருங்கல்பாளையம் காமராஜர் பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள்
விழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் மருத்துவ முகாமை வீட்டு வசதி துறை மற்றும்
மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டு பயனாளிகளுக்கு
உதவிகளை வழங்கினார்.
அதன் பின்னர் அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அவர் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற 4 முகாம்களில் சுமார் 7 ஆயிரம் பேர் கலந்து கொண்டுள்ளனர். 20 வகையான பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
கோயில், பள்ளி அருகில் டாஸ்மாக் கடை இருந்தால் அடைக்க நடவடிக்கை எடுக்கிறோம். மேலும், மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவை பெரும் பகுதியில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அனைத்து இடங்களில் தவறு நடக்கிறது என்பது தவறு. சில இடங்களில் தவறு நடந்திருக்கிறது. தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடையில் போதிய பணியாளர்கள் இல்லாமல் சிரமமப்படுகின்றனர். டாஸ்மாக் கடையில் பல சிரமங்களோடு தான் வேலை செய்கின்றனர். டாஸ்மாக் பணியாளர்களை நூறு விழுக்காடு ஒழுங்குபடுத்த கால அவகாசம் தேவைப்படுகிறது என்று கூறினார்.
ம. ஶ்ரீ மரகதம்







