அமைச்சர் மெய்யநாதனுக்கு திடீர் உடல்நலக்குறைவு; மருத்துவமனையில் அனுமதி

தமிழக அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சிதம்பரம் ரயில் நிலையத்தில் இறங்கி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று இரவு…

தமிழக அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சிதம்பரம் ரயில் நிலையத்தில் இறங்கி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று இரவு ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் புதுக்கோட்டையில் ஏறியுள்ளார். குளிரூட்டப்பட்ட முன்பதிவு பெட்டியில் பயணித்த அவருக்கு அதிகாலை 4 மணி அளவில் சிதம்பரம் அருகே வந்தபோது திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் மெய்யநானுக்கு திடீரென உடல் வியர்த்ததால் தன்னுடைய உதவியாளரிடம்
கூறியுள்ளார். அவர் உடனடியாக போலீசாரை தொடர்பு கொண்டு அமைச்சருக்கு உடல் நலம் சரியில்லாதது குறித்து தெரிவித்தார். இதையடுத்து சிதம்பரம் ரயில் நிலையத்தில்
ரயில் நின்றது. அப்போது சிதம்பரம் ரயில்வே போலீசார் அமைச்சர் மெய்யநாதனை ரயிலில் இருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

இதையடுத்து அவர் சிகிச்சைக்காக அண்ணாமலைநகரில் உள்ள கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது நலமுடன் உள்ளார்.

இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் மாவட்ட போலீஸ் எஸ்பி சக்திகணேசன்
மருத்துவமனைக்கு வந்து அமைச்சரிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார். மேலும்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கதிரேசன் சிதம்பரம்
கோட்டாட்சியர் ரவி ஆகியோரும் மருத்துவமனைக்கு வந்து அமைச்சரிடம் உடல் நலம்
விசாரித்தனர்.

இதையடுத்து அமைச்சரின் குடும்பத்தினர் சிதம்பரம் மருத்துவமனைக்கு வந்து
அமைச்சரை பார்த்தனர். பின்னர் அமைச்சர் மெய்யநாதன் தனி காரில், ஆம்புலன்ஸ்
மற்றும் மருத்துவ குழுவினர் உதவியுடன் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.