எதிர்க்கட்சியினர் பேசுவதைப் பற்றி கவலை இல்லை என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை ராயபுரம் மண்டல அலுவலகத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, மேயர் பிரியா, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். நீர்வழித்தடங்கள் அருகில் வசிக்கும் மக்கள் கொசுத் தொல்லையில் இருந்து விடுபட கொசுவலைகளையும் வழங்கினர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “முதலமைச்சரின் உத்தரவுப்படி வடசென்னை பகுதியில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். மழைநீர் செல்வதற்கு வசதியாக கால்வாய்கள் அனைத்தும் அடைப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சியினர் குறை கூற வேண்டும் என்பதற்காக ஏதாவது பேசி வருகிறார்கள். அவர்களுடைய பேச்சுக்களை கண்டு கொள்வதில்லை. அவர்களைப் பற்றி பேசுவதற்கு நேரமும் இல்லை” என்று குறிப்பிட்டார்.
முதலமைச்சர் பொம்மை போல் செயல்படுவதாக எடப்பாடி பழனிசாமி கூறியது தொடர்பான எழுப்பிய கேள்விக்கு, “எடப்பாடி பழனிசாமியை போல எங்கள் முதலமைச்சர் தஞ்சாவூர் பொம்மை இல்லை” என சேகர்பாபு பதிலளித்தார்.







