சட்டமன்ற தேர்தலில் வாக்கு சேகரிக்க அதிமுகவின் சாதனைகளே போதுமானது என கதர்துறை அமைச்சர் பாஸ்கரன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் ஈடுபடத்தொடங்கிவிட்டன. அதிமுக சார்பில் முதல்வரும், திமுக சார்பில் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதேநேரத்தில் அனைத்து கட்சிகளும் விருப்பமனு வழங்கி வருகின்றன.
அதிமுக- வில் விருப்பமனு தாக்கல் கடந்த 24 ஆம் தேதி தொடங்கியது. இரண்டாம் நாளான நேற்று அதிமுக அலுவலகத்தில் விருப்பமனுவை தாக்கல் செய்ய பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆர்வமுடன் தொண்டர்கள் வந்தனர். உணவு துறை அமைச்சர் காமராஜ் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்தார். அவரை தொடர்ந்து கதர் துறை அமைச்சர் பாஸ்கரன் சிவகங்கை மாவட்டத்தில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாஸ்கரன், வாக்கு சேகரிக்க அதிமுகவின் சாதனைகளே போதுமானது என்றார்.







