வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
கல்வி நிறுவனங்களிலும், அரசுப் பணிகளிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினருக்கு உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டப்பேரவை விதி 235-ன் கீழ் தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 சதவீத இடஒதுக்கீடு 3 பிரிவுகளாக வகைப்படுத்தி உள்ஒதுக்கீடு வழங்கும் வகையில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும், சீர்மரபினருக்கு 7 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ஒதுக்கீட்டின்படி, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கும் முறை மாற்றி அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு தற்காலிகமானது எனவும், 6 மாதங்களுக்குப் பின்னர் இந்த விகிதம் மாற்றி அமைக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்ட, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், வன்னியருக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவித்தார்.