அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை

      ஆதாரம்  இல்லாமல் குற்றச்சாட்டு வைத்ததற்காக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மன்னிப்புக் கேட்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்   உலக குருதி…

 

 

 

ஆதாரம்  இல்லாமல் குற்றச்சாட்டு வைத்ததற்காக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மன்னிப்புக் கேட்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்

 

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்ற  நிகழ்வில் அத்துறையின் அமைச்சர்  மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தார் ,பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கியதில் ஊழல் நிகழ்ந்துள்ளதாக தமிழ்நாடு பாஜக   தலைவர் அண்ணாமலை  கூறிய குற்றச்சாட்டுக்களுக்கு மறுப்புத் தெரிவித்தார். உள்நோக்கத்துடன் இந்த புகார்கள் தெரிவிக்கப்படுவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம்சாட்டினார்

இந்த ஆண்டிற்கான டெண்டர் திறக்கப்பட்டு L1 யார் என்று விதிகளின்படியே முடிவு செய்யப்பட்டதாக கூறிய மா,சுப்பிரமணியன், ஒப்பந்தம் வழங்க தகுதி வாய்ந்ததாக அண்ணாமலை கூறிய நிறுவனம் L2வாக வந்ததாலேயே, அந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்படவில்லை எனக் கூறினார்.

தமக்கு வேண்டிய நபருக்கு ஒப்பந்தத்தை கிடைக்கச் செய்ய வேண்டும் என்கிற நோக்கத்துடனேயே அண்ணாமலை இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை எழுப்புவதாக மருத்துவத்துறை அமைச்சர் தெரிவித்தார்.தமிழ்நாடு பாஜக தலைவர் கூறும் அந்த நிறுவனம் தொழில்நுட்ப ரீதியில் தகுதிவாய்ந்தது அல்ல எனவும் அமைச்சர் தெரிவித்தார. ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை கூறியதற்காக  தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், இல்லையென்றால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார

திருவாரூரில் மருத்துவர் இல்லாமல் குழந்தை இறந்த சம்பவம் குறித்து வேதனை தெரிவித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்,  உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் தங்கள் கடமையை செய்வதை தவறவிடக்கூடாது எனக் கேட்டுக்கொண்டார். இது போன்ற அலட்சியங்களை தொடரும் மருத்துவர்கள் மீது பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்தார்.

 

 

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.