கண்காட்சியில் இடம்பெற்ற சிறிய ரக காரில், நகரைச் சுற்றிப் பார்க்க ஆசைப்பட்ட மாணவர், உரிமையாளர் தர மறுத்ததால், அதேபோன்ற காரை தானே உருவாக்கி, தற்போது உதகை நகர் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
உதகை நகரில் சிறியரக சிகப்பு காரில் இந்த மாணவர் வலம் வருவது, காண்போரை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. இருவர் அமர்ந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கார், பிரதான கார்களில் என்னென்ன அம்சங்கள் உள்ளனவோ, அவை அனைத்தும் இந்த சிறிய காரிலும் இருக்கும் வண்ணம் தனக்குப் பிடித்ததுபோல் உருவாக்கி, கனவை நிறைவேற்றியுள்ளார் உதகையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ரோஷன்.
2016-ம் ஆண்டு உதகையில் நடந்த பழமையான கார் கண்காட்சியில், பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட கார்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அப்போது, பள்ளி சிறுவனாக இருந்த ரோஷன், தனது குடும்பத்தினருடன், கண்காட்சியில் இடம்பெற்ற கார்களை பார்வையிட சென்றார். கண்காட்சியில் சிறியரக கார் ஒன்றைக் கண்டதும், அதில் பயணம் செய்ய ஆசைப்பட்டார் ரோஷன். ஆனால், அந்த காரின் உரிமையாளரோ, முடியாது என மறுத்துவிட்டார். இதையடுத்து ரோஷன் தனது குடும்பத்தினரின் உதவியுடன் அதுபோன்ற காரை உருவாக்க முடிவு செய்தனர். வாகனத்தின் ப்ளூ பிரிண்ட் மாதிரியை எடுத்து, காரை தயாரிக்கக் களத்தில் இறங்கிய ரோஷன், மூன்றே மாதத்தில் அழகான சிறியரக காரை வடிவமைத்தார். தற்போது, அந்த காரில் உதகை நகர் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறார் ரோஷன்.
கார் கண்காட்சியில் தான் ஆசைப்பட்ட காரில் வலம் வர முடியாமல்போனது தான், தற்போது இந்த சிறிய ரக காரை உருவாக்க ஊக்கமளித்ததது என்று பெருமிதத்துடன் கூறுகிறார் கல்லூரி மாணவர் ரோஷன்.









