ஜி20 விருந்தினர்களுக்கு தினை சார்ந்த உணவுப்பட்டியல் – பரிமாற தங்கம், வெள்ளி பாத்திரங்கள்!

டெல்லியில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் முக்கிய விருந்தினர்களுக்கு தங்கம், வெள்ளிகளால் ஆன பாத்திரங்களால் உணவு பரிமாற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஜி-20 அமைப்புக்கு இந்த முறை இந்தியா…

டெல்லியில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் முக்கிய விருந்தினர்களுக்கு தங்கம், வெள்ளிகளால் ஆன பாத்திரங்களால் உணவு பரிமாற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஜி-20 அமைப்புக்கு இந்த முறை இந்தியா தலைமை ஏற்றுள்ளது. ஜி-20 குழுவின் 18-வது மாநாடு வரும் செப்டம்பர் 9 மற்றும் 10-ம் தேதி இந்தியாவில் நடைபெற உள்ளது. அதற்கான பணிகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஆல்பனேசி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், ஜப்பான் பிரதமர் கிஷிடா உள்ளிட்டோா் இந்த மாநாட்டில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது. மேலும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், பிரான்ஸ் அதிபர் மேக்ரான், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என்றும் பதிலாக அந்த நாட்டு பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜி20 மாநாட்டை முன்னிட்டு சர்வதேச தலைவர்கள் உள்ளிட்டோருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருந்து அளிக்கிறார். 9ஆம் தேதி நடைபெறும் விருந்தில் பங்கேற்பதற்காக அனைத்து முக்கிய தலைவர்களுக்கும் குடியரசு தலைவர் அழைப்பிதழ் அனுப்பியுள்ளார்.

இதற்கு வருகை தரும் 20 நாடுகளுக்கும் மேற்பட்ட தலைவர்கள் டெல்லியில் பல்வேறு நட்சத்திர ஹோட்டல்களில் தங்குகின்றனர். பாதுகாப்பு கருதி அமெரிக்கா, கனடா, சீனா போன்ற நாடுகளின் தலைவர்கள் ஐடிசி, தாஜ் போன்ற முழு நட்சத்திர ஹோட்டலை தனியாக எடுத்து தங்குகின்றனர். நிகழாண்டு சா்வதேச சிறு தானியங்கள் ஆண்டாக கொண்டாடப்படும் நிலையில், இவா்கள் தங்கியிருக்கும் ஹோட்டல்களில், புதுமையான தினை உணவு வகைகளைக் கொண்டு சர்வதேச தலைவர்களுக்கு உணவுகளை பரிமாற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரட்டன் பிரதமர் ரிஷி சுனக் போன்ற உலகின் முக்கியத் தலைவர்களுக்கு வெள்ளி தட்டுகள், குவளைகள் போன்ற பாத்திரங்களாலும், தங்க முலாம் பூசப்பட்ட பாத்திரங்களாலும் உணவு பரிமாற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக 15,000 பாத்திரங்களை ஜெய்ப்பூரை சேர்ந்த நிறுவனம் தயாரித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் இந்த பணிகள் கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்த பாத்திரங்களை 200 கலைஞர்கள் வடிவமைத்துள்ளனர். பாரத் மண்டபத்திலும், நட்சத்திர விடுதிகளிலும் முக்கிய தலைவர்களுக்கு இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த பாத்திரங்களில்தான் உணவு பரிமாறப்படவுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.