கோபா அமெரிக்கா கோப்பையுடன் மெஸ்ஸி எடுத்த புகைப்படம், இன்ஸ்டாகிராமில் அதிக லைக்ஸ் பெற்ற விளையாட்டு வீரரின் புகைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
கால்பந்து உலகின் தலைசிறந்த வீரராக கருதப்படுபவர் லியோனல் மெஸ்ஸி. சமீபத்தில் நடந்து முடிந்த கோபா அமெரிக்கா தொடரில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி, நடப்பு சாம்பியன் பிரேசிலை வீழ்த்தி கோப்பையை வென்றது.
23 ஆண்டுகளுக்குப் பிறகு அர்ஜெண்டினா கோப்பையை வெல்ல மெஸ்ஸி முக்கிய காரணமாக இருந்தார். அதே நேரத்தில் தனது முதல் சர்வதேச கோப்பையும் மெஸ்ஸி வென்றார். அப்போது கோப்பையுடன் அவர் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிட்டிருந்தார். அவரது இந்த புகைப்படம் தற்போது 2 கோடி லைக்ஸை கடந்துள்ளது.
இதன் மூலம், நட்சத்திர வீரர் ரொனால்டோவின் லைக்ஸ் சாதனையை மெஸ்ஸியின் புகைப்படம் முறியடித்துள்ளது. கால்பந்து ஜாம்பவான் மரடோனாவுடன், ரொனால்டோ எடுத்த புகைப்படம் 1.9 கோடி லைக்ஸ் பெற்றிருந்தது.
தற்போது மெஸ்ஸி கோப்பையுடன் இருக்கும் புகைப்படம் அதனை முறியடித்து 2 கோடி லைக்ஸை கடந்துள்ளது. இதனை மெஸ்ஸி ரசிகர்கள் சமூக வலைதளத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.








