டிஐஜி விஜயகுமார் தற்கொலை சம்பவம் தொடர்பாக பேசிய தமிழக முன்னாள் டிஜிபி
சைலேந்திரபாபு மனநோய் மிகப்பெரிய கொடிய நோய் என தெரிவித்துள்ளார்.
சென்னை தரமணியில் தனியார் நிறுவனம் நடத்திய சைக்கிள் கண்காட்சியை தமிழக
முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து
கொண்டு செய்தியாளர்களை சந்தித்த சைலேந்திரபாபு சிறுவர்கள் படிக்கும் நேரத்தை
தவிர மற்ற நேரங்களில் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி கிடக்காமல் சைக்கிள்
ஓட்ட வேண்டும் என்றும் இதனால் உடல் மற்றும் மனநலம் நன்றாக இருக்கும் என
முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
சிறு மற்றும் குறு தொழில் தமிழ்நாட்டில் பெருகி வரும் வேளையில், உயர் ரக
சைக்கிள்களை வெளிநாட்டிலிருந்து வாங்குவதற்கு பதிலாக தமிழ்நாட்டிலேயே அதன்
உற்பத்தி யை தொடங்குவதற்கு முதலீட்டாளர்கள் முன் வர வேண்டும் என கோரிக்கை
விடுத்தார்.
டிஐஜி விஜயகுமார் தற்கொலை தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த சைலேந்திரபாபு, டிஐஜி விஜயகுமாரின தற்கொலை துரதிஷ்டவசமானது என தெரிவித்தார். முன்கூட்டியே அவருக்கு மன அழுத்தம் இருந்து வருவது தெரியவந்துள்ளது அதற்கான சிகிச்சையும் மேற்கொண்டு வந்துள்ளார். இதனை மீறி நடந்த தற்கொலை சம்பவத்திலிருந்தே மனநோய் என்பது ஒரு மிக கொடிய நோய் என தெரிய வருகிறது என குறிப்பிட்டார்.
மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காவலர்களின் மன அழுத்தத்தை போக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, உயர்தர மண நல பயிற்சியாளர்கள் உதவியுடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை சுட்டிக்காட்டிய அவர் இதுபோன்ற சூழ்நிலையில் குடும்பத்தார் நண்பர்கள் சக காவல்துறையினர் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.







