முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

வங்கக் கடலோரம் முத்தமிழறிஞருக்கு நினைவிடம்


வரலாறு சுரேஷ்

கட்டுரையாளர்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு அண்ணா நினைவிட வளாகத்தில், ரூ.39 கோடியில் நினைவிடம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டின் முதலமைச்சர்களிலேயே பல்துறைவித்தகராக திகழ்ந்த ஒருவர் என்றால், அது முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி தான். பெரியாரின் கொள்கையை நெஞ்சில் ஏந்தி, அண்ணாவின் வழியில் சமூகநீதி அரசியலை முன்னெடுத்த கருணாநிதி, 5 முறை முதலமைச்சராக பதவி வகித்தவர்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம், மகளிருக்கு சொத்தில் சம உரிமை, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், தொழில் வளாகங்கள் உருவாக்கம், நமக்கு நாமே திட்டம், மருத்துவம், பொறியியல் கல்விபயில நுழைவுத்தேர்வு ரத்து, மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், கூட்டுக்குடிநீர் திட்டம் என ஏராளமான திட்டங்களை செயல்படுத்தினார். தமிழ்நாடு எனும் பெயர் அண்ணாவால் சட்டமாக்கப்பட்டிருந்தாலும், அந்த பெயரை ஏந்தி தமிழர்கள் பெற்ற பெரும்பாலான நலத்திட்டங்களுக்கு பின்னால் இருந்தவர் கருணாநிதி…

80 ஆண்டுகால பொதுவாழ்வில் 70 ஆண்டுகள் பத்திரிகையாளர், 60 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினர், 50 ஆண்டுகள் திமுக தலைவர் என, தம் வாழ்வின் பெரும்பகுதியை தமிழர்களின் முன்னேற்றத்துக்கு அர்ப்பணித்த அரசியல் தலைவரான கருணாநிதி, கடந்த 2018 ஆகஸ்ட் 7ம் தேதி, உடல்நலக் குறைவால் காலமானார். கருணாநிதி மறைவால் அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டதாக சொன்னவர்களின் பொட்டில் அறைந்தார் போன்று, 2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக பெற்ற வெற்றி எதிர்க்கட்சிகளின் வாயை அடைத்தது.

அந்த சத்தம் அடங்குவதற்குள் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பெற்ற வெற்றி மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக்கியது. முதல் நூறு நாளே முத்தான நூறு என்னும் அளவுக்கு திட்டங்களை செயல்படுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வரலாற்றில் முதல் முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்டை தாக்கல் செய்து, அரசியல் மாச்சர்யங்களுக்கு அப்பாற்பட்டும் வரவேற்பை பெற்றார்.

ஸ்டாலின் என்றாலே உழைப்பு உழைப்பு உழைப்பு என கூறிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெருமையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மெரினாவில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில், ரூ.39 கோடியில் 2.21 ஏக்கர் பரப்பளவில், நவீன விளக்கப் படங்களுடன் நினைவிடம் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். நினைவிட அறிவிப்பை வரவேற்று பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் பேரறிஞர் அண்ணாவின் குடையின் கீழ் நாம் அரசியல் பாடம் கற்றவர்கள் என்றார். வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும் புகழாரம் சூட்டினார்.

கருணாநிதியை தோல்வி தொட்டதேயில்லை என்று பேசிய முதலமைச்சர், அவரை வெற்றி விட்டதும் இல்லை என்று குறிப்பிட்டது நூற்றுக்கு நூறு உண்மையே. அரசியல் களத்தில் தோல்வி என்ற சொல்லையே சந்தித்திராத முத்தமிழறிஞருக்கு, அண்ணாவின் இதயத்தை இரவலாக கேட்ட கருணாநிதிக்கு, அவர் நினைவிட வளாகத்திலேயே நினைவிடம் அமைப்பது பொருத்தமான ஒன்று.

Advertisement:
SHARE

Related posts

நான்கு நாள் சுற்றுப்பயணம்; தமிழ்நாடு வந்தடைந்தார் மோகன் பகவத்

Halley karthi

ஏ.கே.ராஜன் அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல் என்ன?

Jeba Arul Robinson

காரைக்குடியில் போலி ஆவணங்கள் மூலம் இடம் அபகரிப்பு

Vandhana