கட்டுரைகள்

தலைப்புச் செய்தியான தமிழ் வம்சாவளி தலைவர்களின் சந்திப்பு


ஆர்.கே.மணிகண்டன்

கட்டுரையாளர்

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸின் சிங்கப்பூர் பயணம், சர்வதேச அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. Air Force Two என கூறப்படும் தனது பிரத்யேக விமானத்தில், ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூர் விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை, உற்சாகமாக வரவேற்றார் சிங்கப்பூரின் வெளியுறவுத்துறை அமைச்சரான விவியன் பாலகிருஷ்ணன். இவர்கள் இருவருக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இருவருமே தமிழ் வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தென் கிழக்காசிய நாடுகளில் ஒரு வார காலம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் கமலா ஹாரீஸ். சிங்கப்பூரின் அதிபர் ஹலிமா யாகோப் மற்றும் பிரதமர் லீ சென் லூங்கை சந்தித்துப் பேசிய அவர், சிங்கப்பூரில் சாங்கி கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் அதிநவீன போர்க் கப்பலான யுஎஸ்எஸ் துல்சாவில் பணியாற்றும் வீரர்களை சந்தித்து உரையாற்றினார்.

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸின் பயணத்திற்கான ஏற்பாடுகளை, நேரடியாக கவனித்த தமிழரான சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், ஏற்கனவே கடந்த 2018 ஜூன் 12-ல், சிங்கப்பூரில் உச்சக்கட்ட பாதுகாப்புடன் நடைபெற்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் சந்திப்புக்கான ஏற்பாடுகளை கச்சிதமாக செய்து, ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில், கமலா ஹாரீஸ் – விவியன் பாலகிருஷ்ணனின் சந்திப்பு, தற்போது ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சிங்கப்பூர் கடல்பகுதியில், சுழற்சி முறையில் அமெரிக்க போர்க்கப்பல் மற்றும் கண்காணிப்பு விமானங்களை பணியில் ஈடுபடுத்துவது தொடர்பாக, இருநாடுகள் இடையே கமலா ஹாரீஸின் பயணத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளதாக, வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதளப் பாதுகாப்பு தொடர்பான முக்கிய ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனின் பங்களிப்பு பெருமளவில் இருப்பதாக கூறப்படுகிறது.

சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு, ஒருகாலத்தில் அமெரிக்காவின் பரம எதிரியாக கருதப்பட்ட கம்யூனிச நாடான வியட்நாம் செல்லும் கமலா ஹாரீஸ், அங்கு அந்நாட்டு அதிபரை சந்தித்துப் பேசவுள்ளதும், தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. சீனாவுக்கு எதிராக புதிய வியூகம் ஒன்றை வகுக்கவே, அவர் இப்பயணத்தை மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. தென் சீனக் கடலுக்கு வியட்நாம் உரிமை கொண்டாடும் நிலையில், சீனாவோ அது தனக்கு சொந்தமான பகுதி என கூறி வருகிறது. இதுதொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே வார்த்தைப் போர் தொடர்ந்து வருகிறது. இதுபோல், தைவான், புருனே, பிலிப்பைன்ஸ், மலேசியா ஆகிய நாடுகளுக்கும், சீனாவுடன் கடல்வழி மற்றும் எல்லை தொடர்பான பிரச்னைகள் உள்ளன. இந்நிலையில், கமலா ஹாரீஸின் சிங்கப்பூர், வியட்நாம் உள்ளிட்ட தென் கிழக்காசிய நாடுகளுக்கான பயணம், சீனாவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.

இந்தியாவின் அண்டை நாடுகளை, இந்தியாவுக்கு எதிராக பல்வேறு வகைகளில் திருப்பிவிட்ட சீனாவின் அதே ராஜதந்திரத்தை, சீனாவுக்கு எதிராக கையாள அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக, அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதற்கு வூஹான் வைரஸ் என்ற பரப்புரை மற்றும் எல்லைப் பிரச்னைகளையே ஆயுதமாக்கவும், அமெரிக்கா வியூகம் வகுத்திருப்பதாக கூறப்படுகிறது.

தலிபான்களிடம் வீழ்ந்த ஆப்கானிஸ்தானில் இருந்து, அமெரிக்கர்களையும் பிற நாட்டினரையும் பாதுகாப்பாக வெளியேற்றுவதில் அமெரிக்கப் படைகளுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அமெரிக்கா மீதான பிரம்மிப்பையும் வல்லரசு என்ற அந்தஸ்தையும் நிலைநிறுத்திக்கொள்ளும் முயற்சியாக, கமலா ஹாரீஸின் தென் கிழக்காசிய நாடுகளுக்கான பயணத்தை வெள்ளை மாளிகை வகுத்திருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement:
SHARE

Related posts

புதிய சென்சார் கட்டுப்பாடுகள்: கொந்தளிக்கும் திரைத்துறையினர்

Halley karthi

ஓராண்டு சிறை அனுபவத்தை பகிர்ந்துகொண்ட டெல்லி போராட்ட மாணவிகள்

Jeba Arul Robinson

மருத்துவமனையில் அரங்கேறிய காட்சி- வந்தார் சசிகலா… வெளியேறிய இபிஎஸ்

Gayathri Venkatesan