மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஆடி மாத ஊஞ்சல் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூரில் அமைந்துள்ள
புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோயிலில் மாதந்தோறும் அமாவாசை
தினத்தில் ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் ஆடி மாதத்தில் வரும் இரண்டாவது அமாவாசை தினமான நேற்று
அதிகாலையில் நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கு
பால்,சந்தனம், பழச்சாறு கொண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனை
தொடர்ந்து உற்சவர் அங்காளம்மன் மகா சாம்ராஜ்ய தயானி அலங்காரத்தில்
பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பின்னர் இரவு 10.30 மணி அளவில் மகா சாம்ராஜ்ய தயானி அம்மன் அலங்காரத்தில்
உள்ள உற்சவர் அங்காளம்மனை கோயிலின் வடக்கு வாயில் வழியாக பூசாரிகள்
தாலாட்டியவாறு தோளில் சுமந்து வந்து ஊஞ்சல் மண்டபத்தில் உள்ள ஊஞ்சலில் அமர
வைத்து தாலாட்டு பாடல்களை பாடினர்.அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள்
பக்தி பரவசமடைந்து ஓம் சக்தி.. அங்காளம்மா தாயே… அருள்புரிவாயே.. என பக்தி
பரவசமடைந்து கையில் சூடம் ஏற்றி சாமி ஆடி தரிசனம் செய்தனர்.
நள்ளிரவில் நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில்
இருந்து மட்டுமின்றி ஆந்திரா,கர்நாடகா, தெலங்கானா, பாண்டிச்சேரி உள்ளிட்ட
வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சகணக்காண பக்தர்கள் வருகை தந்து சாமி தரினம்
செய்தனர். விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் தலைமையில் 900
காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.







