மேகாலயாவில் தொங்கு சட்டப்பேரவை ஏன்? : அரசியல் பின்னணி என்ன?

திரிபுரா, நாகாலாந்து,  மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில், திரிபுராவில் பாஜக மீண்டும் தனிப்பெரும்பான்மையை பெற்றுள்ளது. நாகாலாந்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது. ஆனால்  மேகாலயாவை பொறுத்தவரை அக்கட்சிக்கு…

திரிபுரா, நாகாலாந்து,  மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில், திரிபுராவில் பாஜக மீண்டும் தனிப்பெரும்பான்மையை பெற்றுள்ளது. நாகாலாந்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது. ஆனால்  மேகாலயாவை பொறுத்தவரை அக்கட்சிக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியுள்ளது. 60 இடங்களில் போட்டியிட்டு 3 இடங்களில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது. மேகாலயாவில் எந்த ஒரு கட்சிக்கோ அல்லது கூட்டணிக்கோ தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் அங்கு தொங்கு சட்டப்பேரவையே அமைந்துள்ளது. இதற்கு காரணம் என்ன?. தேர்தலுக்கு முன்பு மேகாலயா அரசியலில் நிகழ்ந்த திடீர் திருப்பங்கள் என்ன என்று அலசுகிறது இந்த கட்டுரை

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயா கடந்த 1972ம் ஆண்டு அசாமிலிருந்து பிரித்து தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த மேகாலயா மாநிலத்தில் மொத்தம் 60 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன.  இதில் 59 தொகுதிகளுக்கு கடந்த 27ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. சோகியாங் தொகுதியில் ஐக்கிய ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட  டோங்குபர் ராய் லிங்டோ, திடீரென மாரடைப்பால் மரணமடைந்ததால் அந்த தொகுதியில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. 59 சட்டப்பேரவை தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவில் மொத்தம் 85.17 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 2018ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலைப்போலவே இந்த முறையும் தொங்கு சட்டப்பேரவையே அமைந்துள்ளது. தற்போதைய தேர்தல் முடிவுகளை அலசும் முன்பு கடந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மற்றும் அதற்கு பின்பு நிகழ்ந்த அரசியல் நிகழ்வுகளை முதலில் உற்றுநோக்குவோம்.

மேகாலயாவில் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில்  எந்த ஒரு  கட்சிக்கோ அல்லது கூட்டணிக்கோ பெரும்பான்மை கிடைக்கவில்லை. 21 இடங்களைக்  கைப்பற்றி  அதிக இடங்களில் வென்ற கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்த போதிலும் அக்கட்சியால் ஆட்சி அமைக்க முடியவில்லை. 20 இடங்களில் வென்றிருந்த தேசிய மக்கள் கட்சி, பாஜக மற்றும் ஐக்கிய முற்போக்கு கட்சி உள்ளிட்டவற்றுடன் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிகளை ஏற்படுத்தி மேகாலயாவில் ஆட்சியை பிடித்தது.  மேகாலயா ஜனாநாயக கூட்டணி  என்று அமைந்த இந்த கூட்டணியில் தேசிய மக்கள் கட்சி. ஐக்கிய ஜனநாயக கட்சி, பாஜக, மலைப்பிரதேச மக்கள் ஜனநாயக கட்சி, மக்கள் ஜனநாயக முன்னணி ஆகிய 5 கட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இந்த கூட்டணிக்கு தலைமையேற்றிருந்த மக்கள் தேசிய கட்சிக்கு வடகிழக்கு மாநிலங்களில் தோன்றிய கட்சிகளில் தேசிய கட்சி என்கிற தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற்றுள்ள ஒரே கட்சி என்கிற பெருமையும் உள்ளது. முன்னாள் மக்களவை சபாநாயகர் பி.ஏ சங்மாவால் கடந்த 2013ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த கட்சியை அவரது மறைவுக்கு பின்னர் அவருடைய மகன் கோன்ரட் சங்கமா வழிநடத்தி வருகிறார். 2018ம் ஆண்டு தேர்தலுக்கு பின் 5 கட்சி கூட்டணியை ஏற்படுத்தி ஆட்சியை பிடித்த அவர் முதலமைச்சர் பதவியையும் ஏற்றார்.  ஆனால் 2023ம் ஆண்டு தேர்தல் நெருங்க நெருங்க இந்த கூட்டணியில் விரிசல் அதிகரித்து ஒரு கட்டத்தில் சிதறி உடைந்தது. தேசிய மக்கள் கட்சியுடன் பிற கூட்டணி கட்சிகளுக்கு ஏற்பட்ட கருத்துவேறுபாடு மற்றும் தனித்து களம் கண்டு பலத்தை நிரூபிக்கும் ஆசை போன்றவை இதற்கு காரணங்களாக கூறப்பட்டன.

குறிப்பாக பாஜக இந்த முறை தனித்து களம் காண வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டியது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக திரிபுராவைப் போல் மேகாலயாவிலும் திருப்பத்தை ஏற்படுத்திவிடலாம் என்ற நம்பிக்கை அக்கட்சிக்கு இருந்தது.  கிறிஸ்தவர்கள் அதிகம் உள்ள மேகாலயாவில் தனித்து ஆட்சியை பிடித்துவிட்டால் அது சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்ற பிம்பத்தை உடைக்க தங்களுக்கு உதவும் என பாஜக வியூகம் வகுத்ததாகவும் கூறப்பட்டது. 1993ம் ஆண்டு முதல் மேகாலயா சட்டப்பேரவை தேர்தலில் களம் கண்டு வரும் பாஜகவிற்கு இதுவரை குறிப்பிடத் தகுந்தபடி பெரிய வெற்றிகள் எதுவும் கிடைக்கவில்லை. கடந்த 1998ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் 3 இடங்களில் வென்றதுதான் இதுவரை கிடைத்ததிலேயே பெரிய வெற்றி. இந்நிலையில் மேகாலயாவில் பெரும் வெற்றியை குவிக்கும் நோக்கத்துடன் மொத்தம் உள்ள 60 இடங்களிலும் வேட்பாளர்களை களம் இறக்கியது.

ஆளுங்கட்சி கூட்டணி உடைந்ததால் 2023ம் மேகாலயா சட்டப்பேரவை தேர்தலில் பல முனை போட்டி நிலவியது. பாஜக 60 இடங்களில் போட்டியிட்ட நிலையில், தேசிய மக்கள் கட்சி 57 இடங்களிலும், காங்கிரஸ் 60 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் 56 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தன. மற்றொரு முக்கிய கட்சியான ஐக்கிய ஜனநாயக கட்சி 46 இடங்களில் போட்டியிட்டது. அதிக இடங்களில் போட்டியிடுவதால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க தேவையான 31 இடங்களை அடைந்து விடலாம் என்கிற நம்பிக்கையோடும் உற்சாகத்தேடும் அக்கட்சிகள் தேர்தல் களம் கண்டன. ஆனால் அந்த முக்கிய கட்சிகள் அனைத்துக்கும் ஏமாற்றமே தற்போது மிஞ்சியுள்ளது. கடந்த சட்டப்பேரவை தேர்தலைப்போல இந்த தேர்தலிலும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டப்பேரவையே அமைந்துள்ளன.

எனினும் ஆளுங்கட்சியான தேசிய மக்கள் கட்சிக்கு மகிழ்ச்சியூட்டும் ஒரு விஷயமாக கடந்த முறையைவிட இந்த முறை அக்கட்சி அதிக இடங்களில் வென்றுள்ளது. கடந்த முறை 20 இடங்களிலேயே வென்றிருந்த நிலையில் தற்போது 25 இடங்களை கைப்பற்றியுள்ளது. ஆட்சி அமைக்க இன்னும் 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவையே அக்கட்சி பெற வேண்டும்.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை இந்த தேர்தலில் மோசமான தோல்வியை அடைந்துள்ளது என்றே சொல்ல வேண்டும். கடந்த 2018ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் 21 இடங்களில் வென்று அதிக இடங்களில் வென்ற  கட்சியாக உருவெடுத்த காங்கிரஸ் தற்போது 5 இடங்களையே கைப்பற்றியுள்ளது. இந்த நிலைக்கு மேகாலயா காங்கிரசின் பிரதான அடையாளமாக இருந்த முன்னாள் முதலமைச்சர் முகுல் சங்மா,  அந்த கட்சியிலிருந்து விலகியது முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. கடந்த 2021ம் ஆண்டு 11 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுடன் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்.  2018ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்லில் போட்டியிட்டு ஒரு இடத்தில்கூட வெற்றி பெறதா திரிணாமுல் காங்கிரஸ், இந்த இணைப்பால்  ஒரே நாளில் மேகாலயா சட்டப்பேரவையில் பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. இதனால் மேகாலயா அரசியலில் காங்கிரசுக்கு இருந்த  செல்வாக்கை திரிணாமுல் காங்கிரஸ் ஆக்ரமித்துக்கொண்டது. பொதுவாகவே கடந்த தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்கும் இடைப்பட்ட காலத்தில் எம்.எல்.ஏக்களின் கட்சித் தாவல்கள் மேகாலயாவில் அதிக அளவில் நிகழ்ந்தன. 20 எம்.எல்.ஏக்கள் தங்கள் கட்சியிலிருந்து பிற கட்சிகளுக்கு தாவியுள்ளனர். இந்த கட்சி தாவலில் அதிகம் பாதிக்கப்பட்டது காங்கிரஸ்தான். முகுல் சங்கமா காங்கிரசிலிருந்து பிரிந்ததால் ஏற்பட்ட பாதிப்பு தற்போது வெளிவந்திருக்கும்  தேர்தல் முடிவுகள் வரை எதிரொலித்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

மற்றொரு தேசிய கட்சியான பாஜகவிற்கும் மேகாலயா தேர்தலை பொறுத்தவரை ஏமாற்றம்தான். 60 இடங்களில் போட்டியிட்ட அக்கட்சியால் 3 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்திருக்கிறது. தேசிய மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சியில் அங்கம் வகித்துவிட்டு கடைசி நேரத்தில் அந்த கூட்டணியிலிருந்து விலகி தேசிய மக்கள் கட்சி அரசுக்கு எதிராக ஊழல் புகார்களை பாஜக கூறியது மக்கள் மத்தியில் எடுபடவில்லை என்கிற கருத்து முன்வைக்கப்படுகிறது. மேலும் சிறுபான்மையினரின் வாக்குகள் எதிர்பார்த்த அளவிற்கு விழாததும் இந்த தேர்தலில் பாஜகவின் தோல்விக்கு ஒரு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதே நேரம் ஆறுதல் விஷயமாக கடந்த 2018 சட்டப்பேரவை தேர்தலைவிட இந்த முறை கூடுதலாக ஒரு இடத்தில் வென்று மூன்று இடங்களை கைப்பற்றியுள்ளது பாஜக.

இந்த முறையும் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிதான் மேகாலயாவில் ஆட்சியை நிர்ணயம் செய்யப்போகிறது என்பது உறுதியாகியுள்ள நிலையில், தேசிய மக்கள் கட்சி பாஜகவுடன் மீண்டும் கூட்டணியை புதுப்பிக்க தயாராகிவருகிறது. மீண்டும் தொங்கு சட்டப்பேரவைதான் அமையும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறியதிலிருந்தே பாஜக உள்ளிட்ட ஏற்கனவே மேகாலாயா ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகளுக்கு அழைப்புவிடுக்கும் தொனியிலேயே தேசிய மக்கள் கட்சி தலைவரும், மேகாலயா முதலமைச்சருமான கோன்ரட் சங்மாவின் பேச்சுக்கள் அமைந்திருந்தன.  தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வந்த பின்பு, அசாம் முதலமைச்சரும் வடகிழக்கு மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அமைப்பாளருமான  ஹிமந்த பிஸ்வா சர்மாவை மேகாலயா முதலமைச்சர் கோன்ரட் சர்மா சந்தித்துப் பேசியதாகவும் தகவல் வெளியாகின. இந்நிலையில் தற்போது 25 இடங்களில் வென்றுள்ள தேசிய மக்கள் கட்சி, 3 இடங்களில் வென்றுள்ள பாஜக மற்றும்  சுயேட்சை எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோரின் ஆதரவுடன் மேகாலயாவில் மீண்டும் கூட்டணி அரசை அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-எஸ்.இலட்சுமணன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.