நியூஸ் 7 தமிழ் நேரலையில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்; லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்…

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் கோலாகலமாக நடைபெற்றது.  உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை திருவிழா குறிப்பிடத்தக்கதாகும். 12 நாட்கள் நடக்கும் இந்த…

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் கோலாகலமாக நடைபெற்றது. 

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை திருவிழா குறிப்பிடத்தக்கதாகும். 12 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். 2 வார காலம் மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.

உலக பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா ஏப்ரல் 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, இரவு நேரங்களில் சுவாமி-அம்பாள் கற்பக விருட்சம், பூதம், வெள்ளி சிம்மாசனம், தங்க சப்பரம், ரிஷபம், மரவர்ண சப்பரம், இந்திர விமானம் உள்ளிட்ட வாகனங்களில் 4 மாசி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். வீதி உலாவின் போது 4 மாசி வீதிகளிலும் சுவாமியை தரிசிக்க பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள்.

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது. மேற்கு வடக்கு ஆடி வீதியிலுள்ள திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாணம் காலை 8.40 மணிக்கு நடைபெற்றது.

முன்னதாக வரதராஜ பெருமாள் மீனாட்சி அம்மனுக்கு சீர்வரிசை எடுத்து
வரும் நிகழ்வு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் மாலை மாற்றி
கொண்டு மாலை மாற்றும் வைபவம் சிறப்பாக நடைபெற்று. பின்னர் புனித கலச நீர்
அடங்கிய கும்பத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அதைத்தொடர்ந்து மீனாட்சி அம்மனுக்கு பச்சை பட்டுடுத்தி காட்சி அளிக்க சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான மீனாட்சி
சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

அப்போது கோயிலில் கூடியுள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோசம் முழங்க மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றவுடன் பெண்கள் தங்களது மாங்கல்யத்தை புதுப்பித்துக்கொண்டனர். இந்நிலையில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு 1 லட்சம் பக்தர்களுக்கு மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் திருக்கல்யாண விருந்தும் நடைபெற்றது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்களும் மருத்துவக் குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. மேலும், 3 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த முழு திருக்கல்யாண நிகழ்வு, நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியிலும், நியூஸ் 7 தமிழ்  பக்தி யூ டியூப் சேனலிலும் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நேரலை வாயிலாக லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். மேலும் திருக்கல்யாணத்தையொட்டி நியூஸ் 7 தமிழ் சார்பில்  கோயிலின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன.

இந்த திருக்கல்யாண நிகழ்வை காணொலியாக காண: 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.