வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த கணவாய் வனப்பகுதியில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கணியம்பாடியை அடுத்த மேல்வல்லம் கணவாய் வனப்பகுதியில் கிலோ கணக்கில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டப்படும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பச்சை பசேல் ஆக காணப்பட்ட வனப்பகுதி குப்பை கூடாரமாக காட்சி அளிக்கிறது. மருந்து பாட்டில்கள், மாத்திரைகள், பயன்படுத்தப்பட்ட ஊசிகள் பாதுகாப்பான முறையில் அழிக்காமல் நெடுஞ்சாலையின் இரு புறத்திலும் மற்றும் வனப்பகுதியிலும் வீசி செல்லும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வனப்பகுதி நெடுஞ்சாலைக்கு அருகே இருப்பதால் காற்றில் அடித்துக் கொண்டு வரும் இக்கழிவுகள் மூலம் துர்நாற்றம் வீசுவதால் இப்பகுதி வழியே செல்லும் வாகன ஓட்டிகள் முகம் சுழித்தபடியே கடந்து செல்கின்றனர்.200 மீட்டர் தொலைவில் இரண்டு தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளும் கோயிலும் உள்ளன. குறிப்பாக இந்த வனப்பகுதியில் குரங்கு, மான், மயில் உள்ளிட்ட விலங்குகள் உள்ளன. அவைகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, ” இந்த வழியாக வேலூர் மார்க்கெட்டிற்கு அதிக வாகனங்கள் செல்கின்றன. அதில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளை இங்கு விடியற்காலையில் கொட்டிச் செல்கின்றனர். இதனால் இக்கழிவுகள் மூலம் துர்நாற்றம் வீசுகிறது என்றனர். இங்கு வனத்துறை அலுவலகம் செயல்பட்டு வரும் நிலையில் வனக்காவலர்கள் இதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.ஏற்கனவே நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், வனப்பகுதியில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளாலும், பிளாஸ்டிக் கழிவுகளாலும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பகுதியில் குப்பைகள் கொட்டாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
––நியூஸ்7 தமிழுக்காக மாணவ ஊடகவியலாளர் அறிவுச்செல்வன்….






