விநாயகர் சதுர்த்தி: அரசின் உத்தரவை எதிர்த்த மனு தள்ளுபடி

பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி மறுத்த தமிழ்நாடு அரசின் உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.  நெல்லையை சேர்ந்த குற்றாலநாதன் உயர்நீதிமன்ற மதுரை…

பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி மறுத்த தமிழ்நாடு அரசின் உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. 

நெல்லையை சேர்ந்த குற்றாலநாதன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கினை தாக்கல் செய்திருந்தார். அதில், ” தமிழ்நாட்டில் செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. கொரோனா நோய்த்தொற்று பரவலை கருத்தில்கொண்டு, பரவலைத் தடுக்கும் விதமாக விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைக்கவும், கூட்டமாக சென்று நீர்நிலைகளில் கரைக்கவும், ஒன்றிய அரசின் வழிகாட்டலின் அடிப்படையில் அனுமதி மறுத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என குறிப்பிட்டிருந்தார்.

மேலும், விநாயகர் சதுர்த்தி, மக்கள் அனைவரும் இணைந்து கொண்டாடும் விழா. திரையரங்குகள், மால்கள் போன்றவைக்கு தளர்வுகள் வழங்கப்பட்டு, 9ஆம் வகுப்பு முதல் பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் விநாயகர் சிலையை பொது இடங்களில் நிறுவி வழிபட அனுமதி மறுப்பது ஏற்கத்தக்கதல்ல. கடந்த ஆண்டு விநாயகர் சிலைகளை வைக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் பங்கேற்க மட்டும் தடை விதிக்கப்பட்டது. தற்போது கூடுதலாக தளர்வு வழங்கப்பட்டுள்ள நிலையிலும், பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபட அனுமதி மறுப்பது ஏற்கத்தக்கதல்ல. ஆகவே அரசின் உத்தரவை ரத்து செய்து , கொரோனா தடுப்பு வழிகாட்டல்களை பின்பற்றி செப்டம்பர் 10-ஆம் தேதி விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைக்கவும், 12ஆம் தேதி வரை அவற்றை வைத்திருந்து வழிபட்டு நீர்நிலைகளில் கரைக்கவும் அனுமதி வழங்கி உத்தரவிட
வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது..

இந்த வழக்கு நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மனுவை திரும்பப் பெற அனுமதிக்குமாறு கோரப்பட்டது. அதற்கு அனுமதி அளித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.