கட்டுரைகள்

‘லாபம்’ மக்களுக்கானதா?


ஹேலி கார்த்திக்

கட்டுரையாளர்

“ஒருவரின் மூலதனம் இரட்டிப்பு ‘லாபம்’ தருமானால் அது தான் உருவாக்கிய விதிகளையே மீறும், அதுவே 10-20 மடங்கு லாபத்தை தருவதானால் அது எந்த எல்லைக்கும் செல்லும். இதே மூலதனம் 50-60 மடங்கு லாபம் தருமானால் அது தன்னை உருவாக்கியவரை கூட கொல்ல தயங்காது. மேலும் 100 மடங்கிற்கும் மேல் இந்த மூலதனம் லாபம் தருமேயானால் அது தன்னையும் அழித்துக்கொள்ள துணியும்.”

இதுதான் மூலதனத்தின் இயல்பு என பொதுவுடைமை விவரிக்கிறது. இந்த இயல்பின் வினையூக்கியான ‘லாபத்தை’தான் இயக்குநர் ஜனநாதன் விளக்க முற்பட்டுள்ளார்.

ஐந்தாறு ஆண்டுகளுக்கு பின்னர் ஊர்சுற்றியாக இருந்துவிட்டு தனது சிறு கிராமத்தில் கூட்டுப் பண்ணை விவசாய முறையை அறிமுகபடுத்தவும் இதற்கு முன்னர் இருந்த நிர்வாகிகள் நடத்திய முறைகேடுகளையும் பொதுவுடைமை (கம்யூனிச) தத்துவத்தின் கண் கொண்டு விளக்கவும் பக்கிரி எனும் விஜய் சேதுபதி முயல்வது திரைக்கதையின் சாராம்சமாக இருக்கிறது.

முழுக்க முழுக்க பிரச்சார நெடி பரப்பும் இப்படம் பல முக்கிய விடயங்களை தழுவி செல்கிறது. குறிப்பாக தமிழ் சினிமாவில் விவசாய படம் என சொல்லிக்கொண்ட படங்களுக்கு மத்தியில் ‘லாபம்’ சரியான கண்ணோட்டத்துடன் பயணித்திருக்கிறது. ஆனால், மக்கள் மொழியில் அல்ல.

படம் மைய நீரோட்டத்தை விட்டு அடிக்கடி மெள்ள நழுவி சென்றுவிடுகிறது. கூட்டுப் பண்ணை முறை, விவசாயி தனது விளை பொருளுக்கு தான் விலை நிர்ணயிக்க இயலாதது, கரும்பு விவசாயிகள் நிலை, பருத்தியில் முதலாளிகளின் கொள்ளை, பஞ்சமி நிலம் மீட்பு, விவசாய போராட்டத்தில் மக்கள் மீது துப்பாக்கிசூடு, சாணி பால் சவுக்கடி கொடுமையிலிருந்து டெல்டா விவசாயிகளை மீட்க போராடிய பி.சீனிவாச ராவ் வரலாறு, டெல்டா போலீஸின் கோர முகம் என படம் பல விடயங்களை தொட்டிருந்தாலும் சொல்ல வந்த கருத்தை முழுமையாக மக்கள் மொழியில் சொல்ல தவறியிருக்கிறதோ என்கிற எண்ணம் 2 மணி நேரம் 40 நிமிடங்களும் நீடித்தது.

உதாராணமாக சோவியத் ரஷ்யாவில் இயக்குநர் திரைப்படத்தில் குறிப்பிடும் கூட்டு பண்ணை திட்டம் வெற்றியடைந்திருந்தாலும், 1949ல் பொதுவுடைமை அரசாங்கத்தின் கீழ் வந்த சீனாவில் மாவோ அமல்படுத்திய கூட்டுப் பண்ணை முறை தோல்வியை சந்தித்தது. 1952லிருந்து 1975 வரை சீனாவில் தொழில் துறை உற்பத்தி 10 மடங்கு அதிகரித்திருந்தது. ஆனால், வேளாண் துறை வெறும் 2 மடங்கு மட்டுமே அதிகரித்திருந்தது.

இப்படி தோல்வியடைந்த ஒரு திட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்தலாம் என இயக்குநர் கூற வருவதை மட்டும் படத்தில் தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது.

இவ்வாறு கூட்டுப் பண்ணை முறையை அமலாக்க துடிக்கும் இளைஞனுக்கும், அதே பாணியில் அனைவரின் நிலத்தை சுரண்டி எரிபொருள் தொழிற்சாலையை உருவாக்க முயலும் பெரு முதலாளிக்கும், அவருக்கு ஆதரவான நில பிரபுத்துவவாதிகளுக்கும் இடையேயான போராட்டமாக ‘லாபம்’ விரிவடைகிறது.

அதே போல தனது கிராமத்தில் கூட்டுப்பண்ணை விவசாயத்தை மக்கள் மத்தியில் வெற்றிகரமாக அமலாக்கிய பின்னர் பக்கிரி, ”சே குவேரா’ பாணியில் மற்றொரு பகுதிக்கு செல்கிறார். ஆனால், புரட்சியை ஏற்றுமதி செய்ய முடியாது என்பது பொதுவுடைமையின் மற்றொரு யதார்த்தமாகும். மற்றொருபுறம் லாபம் என பெயரிட்டுவிட்டு ‘உபரி மதிப்புக்கு’ போதிய அழுத்தமில்லாமல் படம் நகர்ந்திருக்கிறது.

தனிமனிதனின் பின்னாலிருந்து ஆக்கப்பூர்வமான மாற்றம் ஏதும் நிகழ்ந்துவிடாது என கூறும் இயக்குநர், தனது வார்த்தைக்கு படத்தில் நியாயம் சேர்த்துள்ளார். பக்கிரி சாமியாக வரும் விஜய் சேதுபதியை மையமாக வைத்து திரைக்கதை நகர்ந்தாலும், அவரின் நட்பு வட்டங்களுக்கான முக்கியத்துவத்தையும் இயக்குநர் பகிர்ந்தளித்துள்ளார்.

வணங்காமுடியாக வரும் கெஜபதி பாபுவின் கதாபாத்திரம் இன்னும் வீரியமாக இருந்திருக்கலாமோ என தோன்றுகிறது. அவருடன் பெரும் நிலஉடமையாளராக வரும் கதாபாத்திரங்களின் நடிப்பு இயல்பாக படத்துடன் ஒன்றிபோய் உள்ளது. ராம்ஜியின் ஒளிப்பதிவும், டி.இமானின் இசையும் படத்திற்கு சற்றே வலு சேரத்துள்ளது.

இப்படியான சில ஆக்கப்பூர்வமான விடயங்களை தவிர ‘லாபத்தின்’ போக்கு சரிவர பிடிபடவில்லை. ‘இயற்கையில்’ தொடங்கிய ஜனநாதன் கலைப்பயணத்தின் இறுதி தேர்வாக ‘லாபத்தை’ வைத்திராமல் இருந்திருக்கலாம் என விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

பொதுவுடைமை ஸ்தாபனத்தை பற்றி சோவியத் யூனியனின் ஜோசப் ஸ்டாலின் ஓரிடத்தில் ரெட்டேபிஸ்டுகள் என்கிற சொல்லை பயன்படுத்தியிருப்பார். தமிழ் சினிமா சூழலில் கலைக்கு நியாயம் செய்யும் சில திரைப்படங்கள் மட்டுமே வந்திருக்கின்றன. அந்த வகையில் எந்த செயலையும் வழக்கமான வழிகளில் காலத்தைப் பற்றியோ, புற சூழலைப் பற்றியோ துளியும் கவலைப்படாது தனது பணிகளை செய்யும் எண்ணம் கொண்ட ரெட்டேபிஸ்டு இயக்குநர்கள் மத்தியில் ஜனநாதனின் படைப்பு தனித்துவமானதே.

Advertisement:
SHARE

Related posts

குழந்தைகளின் பசி போக்கும் தாய்ப்பால் தேவதை

Halley karthi

விண்வெளியில் மனிதன் பயணித்த மகத்தான 60வது ஆண்டு!

Halley karthi

வேளாண் பட்ஜெட்: தமிழ்நாடு வரலாற்றில் முதல்முறை

Gayathri Venkatesan