மே 10-ம் தேதி கர்நாடக சட்டமன்றத் தேர்தல்: 13-ந் தேதி வாக்கு எண்ணிக்கை!

மே மாதம் 10-ம் தேதி கர்நாடக சட்டமன்றத் தேர்தல்  நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கர்நாடகா, மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. …

மே மாதம் 10-ம் தேதி கர்நாடக சட்டமன்றத் தேர்தல்  நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கர்நாடகா, மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.  கர்நாடக மாநில தேர்தல் மே மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பினை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிடும் என அறிவித்திருந்தது.

சட்டப் பேரவை பதவி காலம் மே 24-ந் தேதியுடன் நிறைவடையும் நிலையில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து தீவிரமாக பிரச்சாரத்தில் செயல்பட்டு வருகின்றன.

இந்திய தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் வீட்டில் இருந்தபடியே வாக்கு செலுத்தும் விதமாக Vote From Home என்ற முறை கர்நாடகாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறையில் வாக்களிக்க விருப்பம் உள்ளவர்கள் 12 டி என்ற விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து வீட்டில் இருந்தே வாக்களிக்கலாம்  என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்திருந்தார்.

கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்டமாக 124 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி கடந்த மார்ச் 25ம் தேதி  வெளியிட்டது.  இந்த நிலையில் கர்நாடக மாநிலத்துக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று காலை 11.30 மணிக்கு நடைபெற்றது.

இந்த சந்திப்பில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் கர்நாடக தேர்தல் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார்.. அவர் தெரிவித்ததாவது..

”கர்நாடகாவில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 62 லட்சத்து 42 ஆயிரம் உள்ளனர். பெண்கள் வாக்காளர்கள்  2 கோடியே 59 லட்சத்து 26 ஆயிரம் பேர் உள்ளனர். 3-ம் பாலின வாக்காளர்களின் எண்ணிக்கை 41,312 பேர்.

கர்நாடகாவில் முதன்முறையாக 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் வீட்டில் இருந்தபடியே வாக்கு செலுத்தும் விதமாக Vote From Home என்ற முறை தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் கிட்டத்தட்ட 12.51 லட்சம்  உள்ளனர்.

கர்நாடகாவில் வெளிப்படையான நேர்மையான தேர்தலை நடத்துவதற்கு எப்போதும் போல இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தயாராகியுள்ளது. மே 24ம் 2023ல் தற்போதைய சட்டப்பேரவைக்கான காலம் முடிவடைகிறது.

58,000-க்கும் அதிகமான எண்ணிக்கையில் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படுகிறது. அதில் 13,100 வாக்குச்சாவடிகள் முற்றிலும் பெண் அலுவலர்களால் நிர்வகிக்கப்படும். 9.17 லட்சம் பேர் புதிய வாக்காளர்களர்களாக இந்த தேர்தலில்  வாக்களிக்கவுள்ளனர்.

இன்று முதல்  கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததுள்ளன. மே 10ம் தேதி 224 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும். மே 13-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்தார்.

கர்நாடக சட்டப் பேரவை குறித்த தேர்தல் அட்டவணை பின்வருமாறு..

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.