கொரட்டூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு நள்ளிரவில் அதிர்ந்ததால், குடியிருப்பு வாசிகள் சாலையில் தஞ்சம் அடைந்தனர். தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் அரைகுறையாக ஆய்வு செய்ததால் குடியிருப்பு வாசிகள் அதிர்ச்சியடைந்தனர்.
சென்னை கொரட்டூர் காவல் நிலையம் அருகே தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கேஸ்டல் 222 என்ற பெயரில் கடந்த 2019-ம் ஆண்டு விற்பனைக்கு வந்தது. இதில் 225 குடியிருப்புகள் விற்கப்பட்டு அதில் பெண்கள், ஆண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
நேற்று நள்ளிரவு 1 மணியளவில் அந்த குடியிருப்பு வாசிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர். அப்போது திடீரென அந்த அடுக்குமாடி கட்டிடம் பயங்கரமாக குலுங்கியுள்ளது. மேலும் வீட்டிலிருந்த பிளாஸ்டிக் கண்ணாடி பொருட்கள் கீழே விழுந்து உடைந்து உள்ளது. இதனால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அனைவரும் பதறி அடித்து சாலைகளில் தஞ்சை புகுந்தனர்.
மேலும் இது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு கொரட்டூர் போலீசார் விரைந்தனர். தீயணைப்புத் துறை வீரர்களும் சம்பவ இடத்திற்கு சென்றனர். சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் 1 மணியில் இருந்து விடியற்காலை 5 மணி வரை சாலையிலேயே இருந்துள்ளனர். மேலும் அதிகாரிகள் காலை அடுக்குமாடி குடியிருப்பில் ஆய்வு நடத்தப்படும் என்று கூறியதையடுத்து அவர்கள் மீண்டும் தங்களது வீட்டிற்கு பயந்து பயந்து சென்றனர்.
அதேசமயம் கொரட்டூரில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அதிர்வுகள் உணரப்பட்ட அதே நேரத்தில், அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே 5.9 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பின்னர் இது குறித்து தகவல் அறிந்த தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சென்னை சரக மேற்பார்வை பொறியாளர் ராமகிருஷ்ணன், செயற்பொறியாளர் மற்றும் வீட்டு வசதி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் நாளை அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த அதிகாரிகள் ஆய்வு நடத்த இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைதொடர்ந்து அருகே உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு சேதம் அடைந்து காணப்படுவதாக அந்த குடியிருப்பு வாசிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதனால் மேற்பார்வை செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன் எனக்கு நேரமில்லை என்று கூறிவிட்டு அவசர அவசரமாக கிளம்பி விட்டார். இதனால் குடியிருப்பு வாசிகள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.







