ஜார்க்கண்ட் மாநிலத்தில் குறைவான மதிப்பெண் வழங்கியதால் ஆசிரியர்களை மாணவர்கள் மரத்தில் கட்டிவைத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம், தும்கா மாவட்டத்தைச் சேர்ந்த கோபிகந்தம் கிராமத்தில் செயல்பட்டு வந்த பள்ளி ஒன்றில் சமீபத்தில் தேர்வு நடைபெற்றுள்ளது. அதில், செய்முறைத் தேர்வில் ஆசிரியர்கள் குறைவான மதிப்பெண்களை வழங்கியதால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அதற்கு சரியாக பதில் அளிக்காததால் குறிப்பிட்ட பாட ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர்.
மேலும், தேர்வில் தோல்வி பெற வேண்டும் என்பதற்காகவே ஆசிரியர்கள் குறைவான மதிப்பெண்கள் வழங்கியதாகவும் அந்த மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து மாணவர்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து, தும்கா மாவட்டம், கோபிகந்தர் தொகுதி கல்வி விரிவாக்க அலுவலர் சுரேந்திர ஹெப்ராம் கூறுகையில், இச்சம்பவம் குறித்த தகவலறிந்த உடனே அனைத்து ஆசிரியர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினோம். மாணவர்களிடம் விசாரித்தபோது செய்முறைத் தேர்வில் தங்களுக்கு மிகக் குறைவான மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாகவும், ஆசிரியர்களிடமிருந்து போதுமான பதில் கிடைக்கவில்லை என்றும் கூறினர் என்றார்.
-ம.பவித்ரா








