தி லெஜண்ட் திரைப்படத்தின் டிரைலர், வாடி வாசல் பாடல் மற்றும் மொசலோ மொசலு பாடல் தொடர்ந்து கோடிக்கணக்கான முறை பார்வையிடப்பட்டு பொதுமக்களிடையே பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்று வருகிறது.
பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் அருள், தி லெஜண்ட் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை அவரே தயாரிக்கவும் செய்துள்ளார். இப்படத்தின் டிரைலர் யூ-டியூப் தளத்தில் தொடர்ந்து டிரெண்டிங்கில் உள்ளது. இந்தப் படத்தை ஜேடி – ஜெர்ரி இயக்கி வருகின்றனர். இந்தப் படத்துக்கு பிரபல இசை அமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். பிரபு, நாசர், தம்பி ராமையா, கோவை சரளா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சென்னையில் பிரமாண்டமான அரங்கங்கள் அமைத்து துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம், பொள்ளாச்சி, இமயமலை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. முக்கிய காட்சிகள் மற்றும் பாடல்கள் உக்ரைனில் படமாக்கப்பட்டுள்ளன. ஜனரஞ்சக கலைஞன் என அனைவராலும் பாராட்டப்பட்ட விவேக் கடைசியாக நடித்த படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் இடம்பெற்ற மோசலோ மோசலு என்ற பாடல் ஏற்கனவே யூ-டியூப் தளத்தில் வெளியாகி ஒரு கோடிக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு சாதனை படைத்தது. அந்தப் பாடலை பா.விஜய் எழுதியிருந்தார். தற்போது இப்பாடல் 14 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டு தொடர்ந்து டிரெண்டிங்கில் உள்ளது. இந்தப் படத்தில் இடம்பெற்ற மற்றொரு பாடலான வாடி வாசல் பாடலை சிநேகன் எழுதியுள்ளார். பென்னி தயால், ஜோனிடா காந்தி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடலை 17 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்வையிடப்பட்டு பொதுமக்களிடையே பிரம்மாண்டமான வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தப் படத்தின் டிரைலர் சென்னையில் பிரமாண்டமாக விழா நடத்தி வெளியிடப்பட்டது. டிரைலர் வெளியீட்டு விழாவில் முன்னணி கதாநாயகிகள் பங்கேற்றனர். படத்தில் அவர் விஞ்ஞானியாக நடித்துள்ளார். கிராமத்துக்கு வருகை தரும் உலகம் போற்றும் விஞ்ஞானி, எதிர்கொள்ளும் பிரச்னைகள் தான் கதைக் களமாக இருக்கலாம் என்று டிரைலர் மூலம் தெரியவருகிறது. ஒரே நாளில் 50 லட்சம் முறைக்கு மேல் பார்க்கப்பட்டு சாதனை படைத்த இப்படத்தின் டிரைலர், தற்போது 28 மில்லியனுக்கும் மேலானோரால் பார்வையிடப்பட்டு தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.
https://twitter.com/_thelegendmovie/status/1537655599135043584?s=24&t=7KbDfmSAFoRVbWncpWwrqw
இந்நிலையில், இதுகுறித்து தி லெஜண்ட் ட்விட்டர் பக்கத்தில், தி லெஜண்ட் படத்தின் டிரைலர், மொசலோ மொசலு மற்றும் வாடிவாசல் பாடல் தொடர்ந்து பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதை செயல்படுத்திக் காட்டிய படக் குழுவினருக்கு இதயப்பூர்வமான நன்றி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா








