ராமநாதபுரம் அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக ஏற்படவிருந்த பெரும் விபத்து ஊழியரின் சாமர்த்திய செயலால் தவிர்க்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் அருகே வாலாந்தரவை என்ற பகுதியில் ரயில் நிலையம் உள்ளது. இங்கு வழக்கம்போல் தனது ரயில்வே பணிகளை செய்து வந்த கீ மேன் வீரப்பெருமாள் என்ற இளைஞர் வாலாந்தரவை ரயில் தண்டவாளங்களை சரி செய்து கொண்டு வந்தார். அப்பொழுது ரயில் நிலையம் அருகே 100 மீட்டர் தூரத்தில் தண்டவாளத்தில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது கண்ட அவர் அதிர்ச்சியடைந்தார். அந்த நேரத்தில் சென்னையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது.
இதையடுத்து உடனடியாக சாமர்த்தியமாக தனது கைகளில் இருந்த சிவப்பு வண்ணக் கொடியை தூக்கி பிடித்தபடி ரயில் தண்டவாளத்தில் 200 மீட்டர் தூரம் ஓடி வந்து ஆபத்து உள்ளதை லாபகரமாக ரயில்வே ஓட்டுனர்களுக்கு தெரிவித்து கொடியை காட்டி ரயிலை நிறுத்தினார்.
இதைதொடர்ந்து ரயில்வே கார்டு மற்றும் ஓட்டுநர்கள் சாமர்த்தியமாக அதிவேகமாக வந்து கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகத்தை குறைத்து தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ரயிலை நிறுத்தினர். பின்னர் ரயில்வே ஊழியர்கள் மூலம் தற்காலிகமாக தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் சரிசெய்யப்பட்டு எக்ஸ்பிரஸ் ரயில் ராமேஸ்வரத்திற்கு இயக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த ரயில்வே உயர் அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சுமார் 5 மணி நேரமாகப் போராடி ரயில் தண்டவாளத்தின் விரிசலை சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் குறித்தும் விசாரித்து வருகின்றனர். பெரும் விபத்திலிருந்து ரயில் பயணிகளை காப்பாற்றிய ரயில்வே ஊழியர் வீரப்பெருமாள் அப்பகுதி பொது மக்கள் வெகுவாக பாராட்டினர்.








