நான் அவனில்லை திரைப்பட பாணியில், அடுத்தடுத்து 4 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றி தலைமறைவான இளைஞர் புனேவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ராஜகீழ்பாக்கத்தை சேர்ந்தவர் வாணி. இவர் மேட்ரிமோனி இணையதளம் மூலம் அறிமுகமான பிரேம்ராஜ் என்பவரை கடந்த 2020ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் தொழில் செய்ய இருப்பதாக கூறி வாணியின் பெயரில் பல இடங்களில் சுமார் 19 லட்சம் வரை கடன் பெற்றுள்ளார். மேலும், திருமணத்தின்போது வாணிக்கு அவரது பெற்றோர் அளித்த 30 சவரன் நகையையும் பெற்று விட்டு தலைமறைவானார்.
இதையடுத்து வாணி அளித்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், இவரைப்போலவே பெங்களூரு, கேரளா, புனேவை சேர்ந்த 3 பெண்களை வெவ்வேறு பெயர்களில் மோசடியாக பிரேம் ராஜ் திருமணம் செய்துப்கொண்டதை கண்டறிந்தனர். இதுகுறித்த தகவலறிந்த மற்ற மூவரும் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரேம்ராஜை தேடி வந்தனர். இதற்கிடையே புனே பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் தாம்பரம் அனைத்து மகளிர் போலீசார் தற்போது சென்னைக்கு அவரை அழைத்து வர சென்னை விரைந்துள்ளனர்.




