நடிகர் பிரபாஸ் மற்றும் தனது திருமணம் குறித்த கேள்விகளுக்கு முதல் முறையாக மனம் திறந்து நடிகை அனுஷ்கா ஷெட்டி பதிலளித்துள்ளார்.
தமிழில், சிங்கம், வேட்டைக்காரன், தெய்வத்திருமகள், தாண்டவம், என்னை அறிந்தால், பாகுபலி உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் நடிகை அனுஷ்கா. தற்போது மிஸ் ஷெட்டி, மிஸ்டர் போலிஷெட்டி படத்துக்கான பிரமோஷன் பணிகளில் ரொம்ப பிஸியாக இருந்து வருகிறார். இது அவருக்கு 48வது திரைப்படம் ஆகும். அனுஷ்காவும், பிரபல தெலுங்கு ஹீரோ பிரபாஸும் காதலித்து வருவதாக கடந்த சில வருடங்களுக்கு முன் செய்திகள் வெளியாயின.
இதை இரண்டு பேருமே மறுத்தனர். தாங்கள் நண்பர்கள்தான் என்றும் காதலிக்கவில்லை என்றும் கூறியிருந்தனர். பின்னர் நடிகை அனுஷ்கா, உள்ளூர் கிரிக்கெட் வீரர் ஒருவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்பட்டது. அதை நடிகை அனுஷ்கா மறுத்திருந்தார். பின்னர் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் மகனை திருமணம் செய்ய இருப்பதாக வெளியான செய்திகளை, அவரும் மறுத்திருந்தார்.
இந்நிலையில் அண்மையில், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனுஷ்கா, ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். அப்போது நடிகர் பிரபாஸுடன் மீண்டும் ஒன்றாக இணைந்து நடிப்பீர்களா என்று கேட்டதற்கு, ”என் கையில் எதுவும் இல்லை. எங்களது ஜோடியை ரசிகர்கள் அதிகம் விரும்புவார்கள் என்று எனக்குத் தெரியும். இதற்குக் காரணம், அந்த கதையம்சம் மற்றும் படத் தொகுப்புகள் போன்றவைதான். பொருத்தமான கதைகளை உருவாக்கினால் நாங்கள் மீண்டும் இணையலாம்” என்று பதிலளித்தார்.
தொடர்ந்து, 41 வயதாகும் நடிகை அனுஷ்காவிடம் திருமணம் பற்றி கேட்டதற்கு, மிக சப்தமாக சிரித்துவிட்டு, ”உண்மையாகவே, இதற்கு எந்த பதிலும் என்னிடம் இல்லை. அது இயல்பாகவே உரிய நேரத்தில் நடக்க வேண்டும். அதற்கென்று நேரம் இருக்கிறது. அப்போது அது இயல்பாக நடக்கும்” என்று பதிலளித்துள்ளார். அனுஷ்காவும், பிரபாஸும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், இருவருமே ஒருபோதும் இது பற்றி வாய்திறந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.







