மாமன்னன் படத்திற்கு சில இடங்களில் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், தவறாக நினைக்கும் அளவிற்கு படத்தில் ஒன்றும் இல்லை என இயக்குனர் மாரி செல்வராஜின் மூத்த சகோதரர் மாரிராஜ் தெரிவித்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவான மாமன்னன் திரைப்படம் இன்று வெளியானது. அழிந்து வரும் அடிமுறை கலைஞர்களின் உண்மை நிலையை திரைப்படம் விளக்குவதாக கூறப்படுகிறது. வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் மாமன்னன் திரைப்படம் குறித்து இயக்குனர் மாரி செல்வராஜின் மூத்த சகோதரர் மாரிராஜ் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது :“அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் மாரி செல்வராஜ் ஆகியோருக்கு அடிமுறை கலைஞர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். இது உலகம் முழுவதும் கொண்டாடப்பட வேண்டிய படம். படத்தை அனைவரும் கொண்டாடி வருகின்றனர். தமிழர்களின் தற்காப்பு கலையான அடிமுறை கலையை மறந்து விடக்கூடாது. படத்தில் தவறாக நினைக்கும் அளவிற்கு ஒன்றும் இல்லை. படத்தை முழுமையாக பார்த்தால் அதனை எதிர்ப்பவர்களுக்கு முழு கதையும் புரியும்” என அவர் தெரிவித்துள்ளார்.






