மணிப்பூர் வீடியோ விவகாரம் – மெரினாவில் பாதுகாப்பு திடீர் அதிகரிப்பு!

மணிப்பூர் வீடியோ விவகாரம் நாட்டையே உலுக்கிய நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக கடந்த மே மாதம் இரு இனத்தவர்களிடையே தொடங்கிய…

மணிப்பூர் வீடியோ விவகாரம் நாட்டையே உலுக்கிய நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக கடந்த மே மாதம் இரு இனத்தவர்களிடையே தொடங்கிய மோதல் கலவரமாக உருவெடுத்தது. இதில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர்.

கடந்த மே மாதம் இருபெண்கள் வன்முறை கும்பலால் நிர்வாணப்படுத்தப்பட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டது தொடர்பான வீடியோ நேற்று முன்தினம் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மெரினாவில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மெரினாவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூட இருப்பதாக உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் கலங்கரை விளக்கம் முதல் கண்ணகி சிலை வரை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

காவல் ஆய்வாளர் தலைமையில் 4 உதவி ஆய்வாளர்கள் என மொத்தம் 40 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மாலை செல்போன் டார்ச் லைட் அடித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 36 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.