புதுக்கோட்டை மன்னராக இருந்த ராஜகோபால தொண்டைமானுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டுமென முதலமைச்சரிடம் சாருபாலா தொண்டைமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுக்கோட்டைக்கு நேற்று முன்தினம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உள்பட பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார். பல்வேறு துறை சார்ந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்ட முதலமைச்சர், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.

முன்னதாக ரோஜா இல்லத்தில் தங்கியிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, மன்னர் ராஜகோபால தொண்டைமான் நூற்றாண்டு விழாவிற்கு வாழ்த்து செய்தி பெறுவதற்காக, மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த சாருபாலா தொண்டைமான் நேரில் சந்தித்தார். புதுக்கோட்டையைச் சேர்ந்த அமைச்சர் ரகுபதியும் உடனிருந்தார். நூற்றாண்டு விழாக் குழுவின் துணை தலைவர் வழக்கறிஞர் A. சந்திரசேகரன், செயலாளர் சம்பத் குமார், தக்கார் வைரவன், ரவிச்சந்திரன் ஆகியோரும் அங்கு இருந்தனர். அப்போது மன்னர் ராஜகோபால தொண்டைமானுக்கு மணிமண்டபம் கட்டவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இராஜராஜகோபால தொண்டைமான் (1928 -1948) தொண்டைமான் மன்னா்களில் 9வது மற்றும் கடைசி அரசராவார். இவர் ஆங்கிலேயா்களால் தேர்வு செய்யப்பட்டு தனது ஆறாவது வயதில் முடிசசூட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.







