கர்நாடக மாநிலம் மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு தொடர்பாக ஷிவமொக்காவில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு நவம்பர் 19-ம் கர்நாடகா மாநிலம் மங்களூருவில் உள்ள நாகுரி என்ற பகுதியில் ஆட்டோவில் எடுத்துச் செல்லப்பட்ட குக்கர் வெடித்தது. பின்னர் நடந்த விசாரணையில் குக்கரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்தது உறுதியானது. இந்த சம்பவம் சாதாரண விபத்தாக இல்லை. கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடந்த பயங்கரவாத செயல் என்று கர்நாடக டிஜிபி பிரவீன் சூட் தெரிவித்திருந்தார்.
இதுபற்றிய விசாரணையில் முகமது ஷாரிக் என்பவர் குண்டு வெடிப்பு சதித் திட்டத்துடன் ஆட்டோவில் சென்றார் என்றும் அவர் ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்தவர் என்றும் தெரியவந்தது. அவர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது இந்த சம்பவத்தில் குற்றவாளிகளான முகமது ஷாரிக் சொந்த ஊரான சிவமோகா மாவட்டம் தீர்த்தஹள்ளி கிராமத்தில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். மேலும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் கல்வித்துறை அமைச்சராக பணியாற்றிய கிம்மனே ரத்னாக்கர் அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது. கிம்மனே ரத்னாக்கர் வாடகைக்கு எடுத்துள்ள அலுவலகம் தீவிரவாத தாக்குதலில் கைது செய்யப்பட்டுள்ள ஷாரிக்கின் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பாக கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் அராகா ஜனேந்துரா தெரிவிக்கையில், குண்டுவெடிப்பில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான ஷாரிக், முனீர் மற்றும் மதீன் ஆகியோர் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஷிவமொக்காவில் இவர்களது வீடு அமைந்துள்ளது. இவர்களது வீடு மட்டுமல்லாமல் இவர்களுக்கு தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது” என்று கூறினார்.







