மாண்டஸ் புயலின் அசுரவேகத்தால் சென்னையின் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மரங்கள் முறிந்து விழுந்ததில் வீட்டின் சுவர், கார் உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்தன.
மாண்டஸ் புயல் கரையை கடந்துவரும் நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசிவருகிறது. குறிப்பாக சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் அதிகபட்சமாக மணிக்கு 70 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. இந்த காற்றின் வேகத்தால் சென்னை அண்ணாசாலை பகுதியில் ஜெமினி மேம்பாலம் அருகே ராட்சத மரம் வேரோடு முறிந்து விழுந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சென்னையின் முக்கிய சாலைகளில் ஒன்றான இந்த சாலை போக்குவரத்திற்கு மிகவும் முக்கியம் என்பதால் சாலையில் விழுந்து கிடந்த அந்த மரத்தை அகற்ற சென்னை மாநகராட்சி ஊழியர்கள், போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
புயலின் தாக்கம் எதிரொலியாக சென்னை சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் உள்ள கார்நிஸ்வரர் கோவில் குளத்தின் அருகில் நூறு ஆண்டுகள் பழமையான மரம், கோவில் குளத்தின் தடுப்பு சுவரைப் பெயர்த்து விழுந்துள்ளது.
கோபாலபுரம் அவ்வை சண்முகம் சாலை, மயிலாப்பூர் ஈஸ்ட் டிரஸ்ட் சாலை, வில்லவாக்கம் இரயில் நிலையம் ,பேருந்து நிலையம், கோட்டூர் காந்தி புரம் சாலை,பெரம்பூர் இரயில் நிலையம், பெசன் நகர் ருக்மணி சாலை, ஆவடி சிவன் கோவில் சாலை, போன்ற பல்வேறு இடங்களில் சாலையோரம் இருந்த மரங்கள் பலத்த காற்றினால் சாலையில் முறிந்து விழுந்துள்ளன.
விபத்து நேரிட்டு வரும் இடங்களில் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று மின்சார இயந்திரம் மூலம், முறிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். மாண்டஸ் புயல் எதிரொலியாக சென்னை வில்லிவாக்கம் பகுதிகளில் கட்சியின் விளம்பர பலகைகள், மளிகை கடைகள் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன.
கோட்டூர் பகுதியில் காந்திபுரம் சாலையில் பலத்த காற்றினால் சாலையோர இருந்த மரம் வீட்டின் தடுப்பு சுவர் மீது விழுந்ததால் தடுப்பு சுவர் முற்றிலும் சேதம் அடைந்து இடிந்து விழுந்துள்ளது. மரம் முறிந்து விழுந்ததால் தடுப்புச் சுவர் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரும் பலத்த சேதமடைந்தது.
சென்னை பாரிமுனையில் மாண்டாஸ் புயல் காரணமாக மின்கம்பம் இடிந்து சாலையில் விழுந்த காரணத்தால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. மின் கம்பத்துடன் மரமும் சேர்ந்து விழுந்ததால் அப்பகுதியில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை தமிழக அரசும், சென்னை மாநகராட்சி நிர்வாகமும் துரிதப்படுத்தியுள்ளன.