கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயில், மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக திறக்கப்பட்டது.
கார்த்திகை மாதம் நாளை வெள்ளிக்கிழமை பிறக்கிறது. ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்க உள்ளனர். இதனை தொடர்ந்து, மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்பட்டன. 41 நாட்கள் பூஜைகள் நடைபெற்று டிசம்பர் 27 ஆம் தேதி ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடைபெறும்.
இந்த நிலையில் இன்று தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு கோயில் நடையை திறந்து வைத்து தீபாராதனை காண்பித்தார். அதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும், நாளை அதிகாலை முதல் புதிய மேல் சாந்தி நடையை திறந்து பூஜை செய்கிறார்.
அதனை தொடர்ந்து, ஆண்டுதோறும் நடைபெறும் சிறப்பு வாய்ந்த மண்டல பூஜை டிசம்பர் 27 ம் தேதியும் , மகர விளக்கு பூஜை ஜனவரி 15 ம் தேதியும் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.
மேலும், ஐயப்பனை தரிசனம் செய்ய இணையதம் மூலமாக பக்தர்கள் முன்பதிவு செய்ய வேண்டும். பக்தர்கள் என்ற இணையதளம் மூலம் தரிசனத்திற்கான முன்பதிவை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கும் வகையில், நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேவசம்போர்டு தரப்பின் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சன்னிதானம், பம்பை, நிலக்கல் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு பணியில் சுமார் 7,500 போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.







