மஞ்சளாறு அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், கரையோர கிராம மக்களுக்கு இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தேனி மாவட்டத்திலும், கேரளாவிலும் தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மேலும், பெரியகுளம், மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழை காரணமாக சோத்துப்பாறை அணை நேற்று முன்தினம் ஒரே நாளில் 14 அடி உயர்ந்தது.
இதேபோல, மஞ்சளாறு அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 57 அடி உயரம் உள்ள அணையில் நீர்மட்டம் தற்போது 55 அடியை எட்டியுள்ளது. இதனால், தேனி மாவட்டங்களில் உள்ள கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு உள்ளிட்ட மஞ்சளாறு ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கரையோர கிராம மக்கள் ஆற்றைக் கடக்கவோ, குளிக்கவோ முயற்சிக்க வேண்டாம் எனவும் பாதுகாப்பான இடங்களில் இருக்க பொதுப்பணித்துறை வலியுறுத்தியுள்ளது. நேற்று அணை வேகமாக உயர்ந்து வருவதால், அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இன்று இறுதி கட்ட வெள்ள ஆபத்து எச்சரிக்கை பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
– இரா.நம்பிராஜன்








