மத்திய பிரதேசத்தில் தனது சகோதரிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவனைப் பழி வாங்குவதற்காக இளைஞர் ஒருவர் பெண் வேடமிட்டுச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் நாயா என்னும் கிராமத்தில் சோனு என்னும் இளைஞர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அவருக்குச் சகோதரி ஒருவரும் உள்ளார். இந்நிலையில் அவரது சகோதரி ஒருமுறை வெளியே சென்று வரும்போது, வேறு ஒரு நபர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அந்த பெண் தனது சகோதரன் சோனுவிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் பாலியல் தொல்லை கொடுத்தவருக்குத் தகுந்த பாடம் கற்றுக்கொடுக்க நினைத்த சோனு பெண் போல வேடமிட்டுச் சென்று அந்த நபரிடம் தன்னுடைய பெயர் சோனியா எனக்கூறி அறிமுகமாகியுள்ளார். மேலும் அந்த நபருடன் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் சோனு வெளியே சென்றுள்ளார்.
இந்நிலையில் இருவரும் பக்கத்தில் இருக்கும் கிராமத்திற்குச் சென்று தனிமையான இடத்தில் மது அருந்தியுள்ளனர். இதனைப்பார்த்த அப்பகுதி மக்கள் திருடர்கள் என நினைத்து சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த நபர் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால் கிராம மக்கள் பெண் வேடமிட்டிருந்த சோனுவை மட்டும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் சோனுவிடம் தப்பிச் சென்ற இளைஞர் குறித்து விசாரித்துள்ளனர். அப்போது சோனு, தான் பெண் இல்லை எனவும், தனது சகோதரிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவனுக்குப் பாடம் புகட்டவே பெண் வேடமிட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய திட்டம் நிறைவேறுவதற்கு முன்னமே போலீசாரிடம் சிக்கிக்கொண்டதையும் கூறியுள்ளார்.
இதனால் போலீசார் தப்பிச் சென்ற இளைஞரை சுமார் இரண்டு மணி நேரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு அப்பகுதியிலிருந்த புதர் பகுதியில் பிடித்தனர். பின்னர் சோனு அளித்த புகாரின் அடிப்படையில் அவரை கைது செய்தனர். தனது சகோதரிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவனைப் பழி வாங்குவதற்காகச் சகோதரன் பெண் வேடமிட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.







