குடும்பத் தகராறு காரணமாக அரிவாளால் வெட்டப்பட்டு இளைஞரின் வலது கை துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து அறுவை சிகிச்சை மூலமாக இளைஞருக்கு கை இணைக்கப்பட்டது.
இந்த சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்திருந்தால் பல லட்சம் ரூபாய் அளவுக்கு செலவாகி இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் கணேஷ் (21). இவர் திருப்பூரில் தங்கி வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 8ஆம் தேதி குடும்பத் தகராறு காரணமாக நடைபெற்ற பிரச்சினையில், அவரது உறவினர் ஒருவர் கணேஷை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில், முதுகு, கழுத்து ஆகியவற்றில் வெட்டு விழுந்ததோடு, கணேஷின் வலது கை துண்டாக வெட்டப்பட்டது.
இதையடுத்து, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் கணேஷ் அனுமதிக்கப்பட்டார். துண்டான அவரது கை விரல்களை ஈரத் துணியில் சுற்றி, பிளாஸ்டிக் பையில் வைத்து கட்டி, அதனை ஐஸ் கட்டிகள் நிறைந்த பெட்டியில் வைத்து பத்திரமாக கோவைக்கு கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து, துரிதமாக செயல்பட்ட அரசு மருத்துவர்கள் மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொண்டு கணேஷின் துண்டான கையை உடலுடன் இணைத்தனர். அப்போது, எலும்புகள், தசைகள், நரம்புகள் மற்றும் ரத்தக் குழாய்களும் இணைக்கப்பட்டன.
இதையடுத்து கடந்த 20 நாள்களாக மருத்துவர்களின் மேற்பார்வையில் இருந்த கணேஷ் கை இணைக்கப்பட்டு குணமாகி வருகிறார். இந்த சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்திருந்தால் பல லட்சம் ரூபாய் அளவுக்கு செலவாகி இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
துரிதமாக செயல்பட்டு கைகளை இணைத்த, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்களுக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.









