பொருளாதார மேதை அமர்த்தியா சென்னிடம் அவருக்கு சொந்தமான நிலங்களின் ஆவனங்களை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சந்தித்து வழங்கியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் சாந்திநிகேதனில் முறைகேடாக வைத்துள்ள நிலங்களை ஒப்படைக்க கோரி நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியா சென்னுக்கு விஸ்வபாரதி பல்கலைக்கழகம் கடிதம் அனுப்பியது. தொடர்ச்சியாக மூன்று முறை அமர்த்திய சென்னுக்கு இந்த விவகாரம் தொடர்பாக விஸ்வபாரதி பல்கலைக்கழகம் கடிதம் அனுப்பியது.
ஆனால், இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த அமர்த்திய சென், சாந்திநிகேதனில் நான் வைத்துள்ள நிலங்கள் அனைத்தும் என் அப்பாவால் வாங்கப்பட்டது. சில நிலங்கள் குத்தகைக்கு எடுக்கப்பட்டது என்று தெரிவித்திருந்தார். மேலும், இங்கிருந்து என்னை வெளியேற்ற முயற்சி நடக்கிறது எனவும் அமர்த்தியா சென் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் மீது குற்றம் சுமத்தியிருந்தார். இந்நிலையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சாந்தி நிகேதனில் உள்ள அமர்த்தியா சென் வீட்டுக்கு சென்று அவர் வைத்துள்ள நிலங்களுக்கு சொந்தமான ஆவணங்களை வழங்கியுள்ளார்.
அதன்பிறகு பேசிய மம்தா பானர்ஜி, ”இதற்கு மேல் அமர்த்தியா சென்னை இழிவுபடுத்துவதை பொறுத்துக் கொள்ளமுடியாது. அவர் வைத்துள்ள நிலங்களின் ஆவணங்களை கொடுத்துள்ளேன். விஸ்வபாரதி பல்கலைக்கழகம் கூறுவது முற்றிலும் தவறு. பல்கலைக்கழகம் மீது சட்டப்படி அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.







