இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த மாலத்தீவு அமைச்சர்!

மாலத்தீவுக்கு அத்தியாவசிய பொருட்களை ஏற்றுமதி செய்ய அனுமதி தரப்பட்டுள்ள நிலையில், இதற்கு இந்தியாவுக்கு அந்நாட்டு அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார். இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு சமீபத்தில் சென்று வந்த பிரதமர் மோடி, அவரது அனுபவங்களை…

மாலத்தீவுக்கு அத்தியாவசிய பொருட்களை ஏற்றுமதி செய்ய அனுமதி தரப்பட்டுள்ள நிலையில், இதற்கு இந்தியாவுக்கு அந்நாட்டு அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு சமீபத்தில் சென்று வந்த பிரதமர் மோடி, அவரது அனுபவங்களை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவு செய்தார். மாலத்தீவுக்கு போட்டியாக லட்சத்தீவு சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் இந்தியாவின் முயற்சி இருப்பதாக பல கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
இதையடுத்து, பிரதமரின் லட்சத்தீவு பயணத்தை முன் வைத்து, மாலத்தீவு அமைச்சர்கள் உள்ளிட்ட அந்நாட்டின் தலைவர்கள் சிலர் சமூக ஊடகத்தில் இந்தியா மற்றும் பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் கருத்துகளை பதிவிட்டனர்.  மாலத்தீவு அமைச்சர்களின் கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து, கடந்த சில மாதங்களாக இந்தியா மற்றும் மாலத்தீவு இடையே கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது என்றும் குறிப்பாக சீனாவின் ஆதரவாளரான மாலத்தீவு அதிபர் முகமது முயசு இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் மாலத்தீவுக்கு கோதுமை, அரிசி, சர்க்கரை, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி அளித்துள்ளது.இதனையடுத்து இந்தியாவுக்கு மாலத்தீவு அமைச்சர் மூசா ஜமீர் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில், இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இந்திய அரசுக்கு நாங்கள் மனதார நன்றி கூறுகிறோம். 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து அத்தியாவசியப் பொருட்களை மாலத்தீவுகளில் இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்கு நன்றி என்றும்,

இந்தியாவின் இந்த நடவடிக்கை உண்மையிலேயே இரு நாட்டிற்கும் இடையேயான நீண்டகால நட்பைக் மேம்படுத்தும் ஓர் நல்ல முயற்சியாகும் என்றும் மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் மூசா ஜமீர் தனது எக்ஸ் சமுக வலைதள பக்க்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெய்சங்கர் “வெல்கம் ஜமீர், இந்தியாவை பொருத்தவரை அண்டை நாடுகளுக்கு தான் முன்னுரிமை தருவோம், அதில் இந்தியா உறுதியாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.

https://twitter.com/DrSJaishankar/status/1776457695048167428

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.