பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பிரதமர் ஆகும் கனவில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் சுசில்மோடி விமர்சித்துள்ளார்.
பாஜகவுடனான கூட்டணியை நேற்று முறித்துக்கொண்டு முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணியில் இணைந்து இன்று பீகாரின் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றார்.
நிதிஷ்குமாரின் இந்த நடவடிக்கையை பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பீகார் பாஜகவின் மூத்த தலைவரும் அம்மாநில முன்னாள் துணை முதலமைச்சருமான சுசில் மோடி இதுகுறித்து கருத்து தெரிவிக்கும்போது, நிதிஷ்குமாரை 5 முறை முதலமைச்சராக பாஜக ஆக்கியுள்ளதாகக் கூறினார். ஆனால் இரண்டு முறை பாஜகவுடனான கூட்டணியை அவர் முறித்துக்கொண்டுள்ளதாகவும் சுசில்மோடி விமர்சித்தார்.
குடியரசு துணை தலைவராவதற்கு நிதிஷ்குமார் விரும்பியதாகவும், அவரை குடியரசு துணை தலைவர் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கக்கோரி ஐக்கிய ஜனதா தள தலைவர்கள் பாஜகவை அணுகியதாகவும் கூறியுள்ள சுசில் மோடி, அந்த விருப்பம் நிறைவேறாததால் தற்போது பிரதமர் ஆகும் கனவுடன் பாஜக கூட்டணியிலிருந்து நிதிஷ்குமார் வெளியேறியுள்ளதாக குற்றம்சாட்டினார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை உடைத்ததுபோல் தங்கள் கட்சியையும் உடைக்க பாஜக சதி செய்தது என ஐக்கிய ஜனதா தள கட்சியினர் கூறிய குற்றச்சாட்டை மறுத்த சுசில் மோடி, கூட்டணி கட்சியை பாஜக ஒரு போதும் உடைத்ததில்லை என்று கூறினார். மகாராஷ்டிராவில் சிவசேனா பிளவுபட்டபோது அந்தக் கட்சி பாஜக கூட்டணியில் இல்லை என்றும் காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் இருந்தது என்றும் பாஜக மூத்த தலைவர் சுசில்மோடி சுட்டிக்காட்டினார்.







