மகரவிளக்கு பூஜை பாதுகாப்பு ஏற்பாடு; சபரிமலையில் 3 ஆயிரம் போலீசார் குவிப்பு

மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலையில் பாதுகாப்பு பணிக்காக 3 எஸ்பிக்கள் தலைமையில் 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயில் மகரவிளக்கு கால பூஜைகள் கடந்த 31ம் தேதி தொடங்கியது. மண்டல காலத்தை…

மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலையில் பாதுகாப்பு பணிக்காக 3 எஸ்பிக்கள் தலைமையில் 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோயில் மகரவிளக்கு கால பூஜைகள் கடந்த 31ம் தேதி தொடங்கியது.
மண்டல காலத்தை விட தற்போது சபரிமலையில் பக்தர்கள் அதிகமாக குவிந்து
வருகின்றனர். தினமும் சராசரியாக 90 ஆயிரத்திற்கு அதிகமான பக்தர்கள் தரிசனம்
செய்து வருகின்றனர்.

இதனால் பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை உள்ளது.பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை வரும் 14ம் தேதி நடக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடந்து வருகிறது. மகரவிளக்கு தினத்தன்று அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் நெரிசல் ஏற்படாமல் இருக்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

சன்னிதானம், பம்பை, நிலக்கல் ஆகிய இடங்களில் 3 எஸ்பிக்கள் தலைமையில் 3 ஆயிரம்
போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மகரவிளக்கு தினத்தன்று
போலீஸ் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்படும் என்று சன்னிதானம் எஸ்பி பிஜூ மோன்
தெரிவித்தார். நிலக்கல்லில் 6 டிவைஎஸ்பிக்கள், 15 இன்ஸ்பெக்டர்கள் 83 எஸ்ஐகள்,
8 பெண் இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள், 350 ஆண் காவலர்கள் , 40 பெண் காவலர்கள் என
502 பேர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பம்பையில் 6 டிவைஎஸ்பிக்கள், 15 இன்ஸ்பெக்டர்கள், 88 எஸ்ஐ-ஏஎஸ்ஐக்கள், 8 பெண்
இன்ஸ்பெக்டர்கள், 430 ஆண் காவலர்கள், 40 பெண் காவலர்கள் என 581 பேர்
பாதுகாப்புபணியில் ஈடுபட்டுள்ளனர். சன்னிதான தனி அலுவலர் இ.எஸ்.பிஜுமோன்
தலைமையில் 12 டி.வை.எஸ்.பி., 36 இன்ஸ்பெக்டர்., 125 எஸ்.ஐ. உட்பட 1875 பேர்
கொண்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கொடிமரம், சோபானம், 18ம் படி, மாளிகைப்புரம், நடைபந்தல், ஜீப் ரோடு, சரங்கொத்தி, மரக்கூட்டம், பாண்டிதாவளம் உட்பட பல இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் NDRF, RAF, பிற மாநில போலீஸ் மற்றும் பல்வேறு பாதுகாப்புப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இடுக்கியில் மகரஜோதி தெரியும் இடங்களான புல்லுமேடு, பாஞ்சாலிமேடு, பருந்தும்பாறை ஆகிய பகுதிகளில் 1,400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். RRT மற்றும் வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க கண்காணிப்பு குழுவை வனப் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.