கொழும்பு வன்முறை – மகிந்த ராஜபக்சவின் வாக்குமூலம் பதிவு

இலங்கை தலைநகர் கொழும்பில் கடந்த 9ம் தேதி நிகழ்ந்த வன்முறை தொடர்பாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டு மக்கள்…

இலங்கை தலைநகர் கொழும்பில் கடந்த 9ம் தேதி நிகழ்ந்த வன்முறை தொடர்பாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டு மக்கள் அரசுக்கும், ஆட்சியாளர்களுக்கும் எதிராக தொடர் போராட்டங்களை நடத்தினர். பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சவும், அதிபர் கோத்தபய ராஜபக்சவும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் அலுவலகமான அலரி மாளிகை முன்பாக அவர்கள் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

நெருக்கடி அதிரித்ததை அடுத்து கடந்த 9ம் தேதி பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகினார். அன்றைய தினம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கொழும்பு-க்கு வந்த அவரது ஆதரவாளர்கள், போராடிக் கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் பலர் படுகாயம் அடைந்தனர்.

அமைதியாக போராடிக்கொண்டிருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த வன்முறைச் சம்பவம் குறித்து விசாரித்த காவல்துறை, வன்முறையில் ஈடுபட்டதாக 2 எம்.பிக்கள் உள்பட ஆளும்கட்சிப் பிரமுகர்கள் பலரை கைது செய்தனர்.

இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்து மகிந்த ராஜபக்சவிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அவர் தங்கி இருக்கும் இடத்திற்குச் சென்று குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.