மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்ரே தலைமையிலான கூட்டணி அரசு ஊசலாடும் நிலையில், உத்தவ்விற்கு எதிராக போர்க்கொடி தூக்கியது ஏன் என்பதை விளக்கி சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ ஒருவர் எழுதிய கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்த 2019ம் ஆண்டு அமைந்தது. சிவசேனாவின் மொத்த எம்.எல்.ஏக்களின் எண்ணிககை 55 ஆனால் அதில் 35க்கும் மேற்பட்டோர் முதலமைச்சர் உத்தவ் தாக்ரேவிற்கு எதிராக தற்போது போர்க்கொடி தூக்கியுள்ளனர். கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அணி வகுத்து நின்று உத்தவ் தாக்ரேவுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சுயேட்சை எம்.எல்.ஏக்கள் உள்ளபட மொத்தம் 46 எம்.எல்.ஏக்கள் தன் பின்னால் அணி வகுத்து நிற்பதாகக் கூறும் ஏக்நாத் ஷிண்டே, அவர்களுடன் பாஜக ஆளும் மாநிலமான அசாம் தலைநகர் கவுகாத்தியில் தற்போது முகாமிட்டுள்ளார். அங்குள்ள ரேடிசன் புளூ ஓட்டலில் அவர்கள் தங்கியுள்ளனர். அந்த ஓட்டலில் இருந்தபடியே முதலமைச்சர் உத்தவ் தாக்ரேவுக்கு எதிராக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கோஷமிடும் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சஞ்சய் ஷிர்சாத் என்கிற அதிருப்தி எம்.எல்.ஏ, உத்தவ் தாக்ரேவாலும், அவரை சூழ்ந்துள்ளவர்களாலும் எவ்வாறு தாங்கள் அவமானப்படுத்தப்பட்டோம் என்பதை விளக்கி எழுதியுள்ள கடிதத்தை ஏக்நாத் ஷிண்டே வெளியிட்டுள்ளார்.
அதில் முதலைமைச்சர் உத்தவ் தாக்ரே, தலைமைச் செயலகத்திற்கு வராமல் எப்போதும் தமது வீட்டிலேயே இருப்பார் எனக் குற்றம்சாட்டியுள்ளார். தொகுதி பிரச்சனை, கட்சி பிரச்சனை, கூட்டணி கட்சியினரிடையே ஏற்படும் சச்சரவுகள் தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து முறையிடலாம் என்று நினைத்து அவரது வீட்டிற்கு சென்றால், உத்தவ் தாக்ரேவை சூழ்ந்திருப்பவர்கள் தங்களை வீட்டிற்குள் அனுமதிப்பதில்லை என்றும் முதலமைச்சரை சந்திக்க விடுவதில்லை என்றும் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார். அதே நேரம் கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் முதலமைச்சரை எளிதில் சந்தித்துவிடலாம் என தனது ஆதங்கத்தை கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ள சஞ்சய் ஷிர்ஷாத், கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்களின் தொகுதிகளின் திட்டங்களுக்கு உடனடியாக நிதி ஒதுக்கப்பட்டுவிடும் என்றும் கூறியுள்ளார். ராமர்கோயில் கட்டுவது சிவசேனாவின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாக உள்ள நிலையில் ஆதித்யா தாக்ரேவுடன் அயோத்தியாவிற்கு செல்லவிடாமல் சிவசேனா எம்.எல்.ஏக்கள் தடுக்கப்பட்டது ஏன் என்றும் அதிருப்தி எம்.எல்.ஏ சஞ்சய் ஷிர்ஷாத் தான் எழுதியுள்ள கடிதத்தில் குற்றம்சாட்டியுள்ளார். அவரது இந்த கடிதம் வெளியானது மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்ரேவுக்கு மேலும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.