உசிலம்பட்டி மலர் சந்தையில் முறையான வடிகால் வசதிகள் இல்லாததால் சிறு மழை பெய்தால் கூட நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அமைந்துள்ள மலர்சந்தை மாவட்டத்தின் முக்கியமான சந்தைகளில் ஒன்றாகும். இங்கிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான டன் மலர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த சந்தையில் முறையான வடிகால் வசதிகள் இல்லாதது பெரும் குறையாக உள்ளது.
சிறு மழை பெய்தால் கூட மழை நீர் வெளியேறுவதற்கு வழியின்றி குளம் போல்
தேங்கி விடுகிறது. மேலும் சந்தையில் இருந்து வெளியேறும் சாக்கடை நீர் மழை நீருடன் சேர்ந்து நாளடைவில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய்தாக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் சந்தைக்கு மிக அருகாமையிலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே இந்த பிரச்சினையில் மாவட்ட நிர்வாகம் தலையீட்டு சந்தையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வடிகால் வசதிகள் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேந்தன்







