மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கடந்த 4 ஆண்டுகளில் 4,312 கருக்கலைப்புகள் செய்யப்பட்டுள்ளதாக ஆர்டிஐ எனப்படும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் தெரிவித்துள்ளது.
தென் மாவட்டங்களில் மிகப் பெரிய அரசு மருத்துவமனையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.இந்த மருத்துவமனை வளாகத்தில் மகப்பேறுக்காக சிறப்பு பிரிவு செயல்படுகிறது.
இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் ஒருவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குழந்தை பிறப்பு, இறப்பு, கருக்கலைப்பு உள்ளிட்ட விபரங்கள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.
அதன்படி ஆர்டிஐ எனப்படும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் அவருக்கு முக்கிய தகவல்களை அளித்தது. அதில் கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கி 2022-ஆம் ஆண்டு வரை நான்கு ஆண்டுகளில் மட்டும் 60 ஆயிரத்து 717 குழந்தைகள் பிறந்துள்ளனர். அவர்களில் 1015 குழந்தைகள் இரட்டையர்கள் ஆவர். இதே காலகட்டத்தில் 4 ஆயிரத்து 312 பெண்களுக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 2022-ஆம் ஆண்டில் மட்டும் அதிகமாக 1413 பெண்களுக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
அறுவைச் சிகிச்சை மூலம் மட்டும் கடந்த நான்காண்டுகளில் 21 ஆயிரத்து 685 குழந்தைகள் பிறந்துள்ளது என்றும், இதில் மொத்த பிரசவத்தில் 64 விழுக்காடு சுகப்பிரசவம் என்றும் கூறியிருந்தது.
மேலும் கடந்த நான்காண்டுகளில் பிரசவத்தின்போது மட்டும்197 தாய்மார்கள் இறந்துள்ளதாகவும் , அதில் கடந்த 2021-ல் மட்டும் 69 பேர் அதிகமாக இறந்துள்ளதாகவும் கூறியுள்ளது. இவ்வாறு ஆர்டிஐ எனப்படும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஆர்டிஐ ஆர்வலர் ஒருவருக்கு கொடுத்த தகவலில் தெரிவித்துள்ளது.









