நாடாளுமன்ற அலுவல் மொழி ஆய்வுக்குழு மதுரைக்கு வரும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை மக்களவைத் தொகுதி எம்.பி. சு. வெங்கடேசன் கடிதம் எழுதினார்.
இதுதொடர்பாக அவர் நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழுவின் துணைக் குழு தலைவர் பார்ட்ருஹிரு மக்தாப், அமைப்பாளர் ரீட்டா பகுகுணா ஜோஷி ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் துணைக் குழு மதுரைக் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளையும் (மே 19), நாளை மறுநாளும் சுற்றுப் பயணம் செய்து அலுவல் மொழி அமலாக்கம் பற்றிய ஆய்வை செய்யப் போகிறது என்ற தகவல் எனது கவனத்திற்கு வந்தது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளைச் சேர்ந்த சக உறுப்பினர்கள் மதுரைக்கு வருவதில் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சிதான். ஆனால், அந்தக் குழு அலுவல் மொழி அமலாக்கம் பற்றிய ஆய்வை செய்யப் போகிறது என்ற தகவல் எனது கவனத்திற்கு வந்தது.
அலுவல் மொழி விதிகள் 1976 (1987, 2007, 2011 இல் திருத்தப்பட்டது) தொடர்ந்து பல ஆண்டுகளாக மீறப்பட்டு வருகிறது. அதன் நோக்கம் இந்தி பேசாத மாநிலங்களின் மீது இந்தியைத் திணிப்பதாகவே சுருங்கி விட்டது. அலுவல் மொழி விதிகள் 1976, பல ஆண்டு விவாதங்கள், போராட்டங்களின் பின்புலத்தில் உருவானது. அவை எல்லாம் இம்மாபெரும் நாட்டின் மொழிப் பன்மைத்துவம் பாதுகாக்கப்பட நடந்தேறிய நிகழ்வுகளே ஆகும்.
எங்கள் தமிழ்நாடு இதற்கான போராட்டங்களில் 1938 இல் இருந்து 1965 வரை முன் வரிசையில் நின்ற மாநிலம்.
முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு, 1963இல் இந்தி எப்போதுமே திணிக்கப்படாது என்ற உறுதிமொழியைத் தந்தார். 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பின்னர் அன்றைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, நேருவின் உறுதி மொழியை மீண்டும் புதுப்பித்தார்.
நாடாளுமன்றத்தின் ஆவணங்கள் இது பற்றிய முக்கிய விவாதங்களை காண்பிக்கக் கூடியவை. அவை எவ்வாறு தேசந்தழுவிய கருத்தொற்றுமை உருவானது என்பதற்கான சாட்சியமும் ஆகும். மதுரைக்கு திட்டமிட்டுள்ள அலுவல்மொழி துணைக்குழு வருகையை ரத்து செய்யுங்கள். எதிர்காலத்திலும் தமிழ்நாட்டிற்கு துணைக் குழு வருகையை திட்டமிடாதீர்கள்.
ஏற்கனவே ஒன்றிய அரசு நிறுவனங்கள், துறை அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள அலுவல் மொழி பிரிவு, இந்திய பிரிவுகளை கலைத்துவிட வேண்டும். இவ்வேண்டுகோள்கள் இரண்டையும் அலுவல் மொழி விதிகள் 1976 க்கு உள்பட்டே முன் வைக்கிறேன். மற்றபடி மதுரை மக்கள் விருந்தோம்பலில் சிறந்தவர்கள். ஆகவே நீங்கள் அனைவரும் தனிப்பட்ட முறையிலான பயணமாக மதுரை வருகை தர வேண்டுமென்று உளமார விரும்புகிறேன். எனது வேண்டுகோள்களை ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.








