இந்திய தலைவர்களில் மற்றவர்களின் படங்களை ரூபாய் நோட்டில் பதிவு செய்தால் அவர்கள் மீது மதம் மற்றும் சாதி ரீதியாக சாயம் பூசப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் உருவப்படத்தை இந்திய ரூபாய் நோட்டுக்களில் அச்சடிக்கக்கோரி பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், துரைசாமி அமர்வில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை பரிசீலனை செய்து உரிய பதில் அளிக்ககோரி உயர் நீதிமன்ற மதுரை கிளை மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
பின்னர் இந்த மனுவை பரிசீலனை செய்த மத்திய அரசு, மனுதாரரின் கோரிக்கையை ரத்து செய்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பின் மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் உருவப்படத்தை இந்திய ரூபாய் நோட்டுக்களில் அச்சடிக்க உரிய உத்தரவு பிறப்பிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் வேறு இந்திய தலைவர்களின் புகைப்படங்களை ரூபாய் நோட்டில் பதிவிட்டால் அவர்கள் மீது சாதி மற்றும் மதரீதியிலான சாயம் பூசப்பட வாய்ப்புள்ளதாக கருத்து தெரிவித்தனர்.








