மதுரையில் குழந்தை பலியான விவகாரம்; போலீசார் விசாரணை

மதுரையில் ஆதரவற்றோர் இல்லத்தில் ஒரு வயது குழந்தை கொரோனாவால் பலியனதாக கூறி மயானத்தில் புதைத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை ரிசர்வ் லைன் காவலர் குடியிருப்பு பகுதியில் இதயம் முதியோர்…

மதுரையில் ஆதரவற்றோர் இல்லத்தில் ஒரு வயது குழந்தை கொரோனாவால் பலியனதாக கூறி மயானத்தில் புதைத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை ரிசர்வ் லைன் காவலர் குடியிருப்பு பகுதியில் இதயம் முதியோர் ஆதரவற்றோர் இல்லம் உள்ளது. இங்கு மேலூர் அருகே உள்ள சேக்கிபட்டி கிராமத்தை சேர்ந்த மனநலம் குன்றிய, ஆதரவற்ற ஐஸ்வர்யா என்ற பெண்ணும், அவரது 3 குழந்தையும் 4 மாதங்களாக உள்ளனர். ஐஸ்வர்யாவின் ஒரு வயது ஆண் குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, கடந்த 11ம் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் அந்த குழந்தை கொரோனாவால் உயிரிழந்துவிட்டதாக போலியான சான்றிதழை காட்டி, தத்தனேரி மயானத்தில் புதைத்துள்ளனர். ஐஸ்வர்யாவை அந்த இல்லத்தில் அனுதித்த சமூக ஆர்வலர் இதுகுறித்து அறிந்து, இல்லத்திற்கு சென்று விசாரித்துள்ளார். மேலும், அவர்களிடம் இருந்து குழந்தைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதற்கான சான்றிதழ்களை வாங்கி பார்த்துள்ளார். அந்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்பதை அறிந்து, அது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அவர் புகார் அளித்துள்ளார்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள கொரோனா பிரிவில் அந்த குழந்தையை அனுமதிப்பதற்கான பரிந்துரை கடிதத்தை இல்ல நிர்வாகிகள் வைத்துள்ளனர். எனினும், குழந்தை அனுமதிக்கப்படவில்லை என்று புகாரில் கூறப்பட்டுள்ளது. ஆட்சியரின் உத்தரவின்பேரில் இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், வட்டாச்சியர், காவல்துறையினர் ஆகியோர் விசாரணை நடத்தினர். போலி ஆவணங்களை பறிமுதல் செய்த போலீசார், தலைமறைவாக உள்ள தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் சிவக்குமாரை தேடி வருகின்றனர். குழந்தை புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.